
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள டோல்கேட்டை கடந்து செல்வதற்காக பக்தர்களின் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் நேற்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 95 ஆயிரத்து 80 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதேபோல், நேற்று மட்டும் பக்தர்கள் காணிக்கையாக 3.47 கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்றும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு காத்து நிற்கின்றனர். இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி நேரம் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.