
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வசந்தோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) வசந்தோற்சவம் தொடங்குகிறது. காலை 6.30 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதியுலா நடக்கிறது. அதன்பின்னர் வசந்தோற்சவ மண்டபத்திற்கு கொண்டு வருகிறார்கள். இங்கு வசந்தோற்சவ அபிஷேக நிவேதனம் முடித்துக் கொண்டு கோவிலுக்கு திரும்புகின்றனர்.
2-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலை 8 மணி முதல் 10 மணி வரை மாட வீதிகளில் வீதியுலா நடக்கிறது. பின்னர் வசந்த மண்டபத்தில் அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர்.
கடைசி நாளான 12-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமியுடன் சீதா ராம லட்சுமணன், ஆஞ்சநேயர், கிருஷ்ணசுவாமி உற்சவமூர்த்திகள் ருக்மணியுடன் வசந்தோற்சவத்தில் பங்கேற்று மாலையில் கோவிலுக்கு திரும்புகிறார்கள். இதையொட்டி தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சுவாமி, தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் நடைபெறும்.
வசந்தோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் 12-ந்தேதி வரை திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதிபாலங்கர சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.