திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்கு ரூ.10.33 கோடிக்கு போலி தரிசன டிக்கெட்டுகள் விற்று சூதாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரசாத்(29). பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர் 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக வேலையைவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறி 2016ம் ஆண்டு திருமலைக்கு வந்தார்.
தொடர்ந்து திருமலையில் லட்டுகளை வாங்கி பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யத் தொடங்கினார். மேலும் அந்த பக்தர்களிடம் போன் நம்பர்களை பெற்று தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம், வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் உள்ளதாக கூறி அவர்களிடமிருந்து அதிக தொகையைப் பெற்றுக்கொண்டு போலி தரிசன டிக்கெட்டுகளை அனுப்பி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பக்தர் ஒருவர் அளித்த புகாரின்படி பிரசாத்தை நேற்று கைது செய்த திருமலை முதலாவது நகர போலீசார், அவரிடமிருந்து ரூ.25,000 மற்றும் 5 செல்போன்கள் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: போலி தரிசன டிக்கெட் விற்று கைதான பிரசாத், தான் திருமலை ஜே.இ.ஓ. ஆபிசில் வேலை செய்வதாக கூறி வந்துள்ளார். மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க எப்போதும் வாட்ஸ்அப் அழைப்புகளை மட்டுமே பயன்படுத்தி மோசடி செய்து வந்துள்ளார். இதற்காக தனது சொந்த பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் பல வங்கிக் கணக்குகளைத் திறந்து பயன்படுத்தி வந்துள்ளார்.
அவ்வாறு அவரது அனைத்து வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது 9 வங்கிக் கணக்குகளில் ரூ.10.33 கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பணத்தையெல்லாம் ஆடம்பர விருந்துகள் மற்றும் சூதாட்டத்திற்காகச் செலவிட்டும், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ சூதாட்டத்திற்குச் சென்று செலவு செய்து வந்துள்ளார். இவர் மீது 2019ம் ஆண்டு திருமலை முதலாவது நகர போலீஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறைக்கு சென்று பின்னர் விடுவிக்கப்பட்டார். பின்னர் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்கு ரூ.10 கோடிக்கு போலி தரிசன டிக்கெட் விற்று சூதாடிய வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.