‘திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார்..’ சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரபல ரவுடி சம்பவ செந்தில் கூட்டாளிகள் மனு

1 month ago 6

சென்னை: திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்பவ செந்திலின் கூட்டாளிகளான ஈஷா மற்றும் யுவராஜ் ஆகியோர் குடும்பத்துடன் புகார் மனு அளித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக அவரது வீட்டிற்கு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மொத்தம் 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் கூலிப்படை தலைவன் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணா ஆகியோரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாயாவி ரவி மற்றும் தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலின் நெருங்கிய கூட்டாளியும், கூலிப்படையாக இருந்த ரவுடிகள் ஈஷா (எ) ஈஸ்வரன், யுவராஜ் (எ) எலி யுவராஜ் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.

அதில் ரவுடி ஈஷா (எ) ஈஸ்வரன் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் பழைய பல்லாவரம் பவானி நகர் 1வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். குடும்பத்திற்கு ஏற்பட்ட சண்டை சச்சரவில் நான் சிறை செல்ல வேண்டி வந்தது. கிடைத்தது எல்லாமே தவறான வழி நடத்தல், தவறு என்று தெரிந்தும் என்னை காப்பற்றி கொள்ள வேண்டி அவர்களோடு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கூலிக்காக எந்த குற்றத்தையும் செய்ததில்லை என்ற மனநிறைவு மட்டும் எப்போது உண்டு. ஆனால் தொடர்ந்து என் மீது பதிவாகும் பொய் வழக்குகள், கால் உடைப்பு மீண்டும் மீண்டும் சிறை என தொடரும் வாழ்க்கை பயணம் பெரும் அச்சத்தை உருவாக்கியுது.

இந்த நிலையில் எனக்கு திருமணமானது, அது ஓரளவேணும் போலீசாரின் மத்தியில் என் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் என்றிருந்தேன். ஆனால் அதை விட மிகப் பயங்கரமான கொடூரம் என் வாழ்வில் நடந்தது. எனது மனைவிக்கு தாய் என்ற உயர்வான மதிப்பையும் தந்தை என்ற இடத்தையும் எனது முதல் மகன் கொடுத்து இருவரையும் மகிழ்வித்தான் என்ற போதும், அடுத்து பிறந்த குழந்தை மரபணு குறைபாட்டுடன் பிறந்தது. இது எனக்கு மிகப்பெரிய குற்ற உணர்வு தந்தது. போலீஸ் தேடுதல், அதனால் ஒரு இடத்தில் நிலையாக எங்களால் இருக்க முடியவதில்லை. எனவே திருத்தி கொள்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். காவல்துறை ஆணையர் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று கட்டுப்பட்டு நடந்து கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், ரவடி யுவராஜ் (எ) எலி யுவராஜூம் புகார் மனு அளித்துள்ளார்.

The post ‘திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார்..’ சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரபல ரவுடி சம்பவ செந்தில் கூட்டாளிகள் மனு appeared first on Dinakaran.

Read Entire Article