
திருநெல்வேலி மாவட்டத்தில், 2008-ம்ஆண்டு கூத்தங்குழி கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட விரோதத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று (17.6.2025) திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மொத்தம் 19 குற்றவாளிகளில், 3 பேர் வழக்கின் விசாரணையின் போதே மரணம் அடைந்த நிலையில், மீதமுள்ள 16 பேர் மீது விசாரணை நடைபெற்றது. இதில் 10 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை பெற்றோர் விவரம்:
1. காந்தி(எ) ராஜேந்திரன்(எ) சிலுவை அந்தோணி (வயது 68),
2. கணேசன்(எ) கணேஷ்(40),
3. சிலம்பரசன்(எ) சிம்பு(39),
4. ஜான்பால்(எ) ஜேசுவடியான்பால்(42),
5. வினோத்(எ) வினோ(42),
6. சஞ்சய்(எ) அருள் சகாயராஜ்(44),
7. அன்டன்(41),
8. ஜேம்ஸ்(39),
9. மைக்கேல்(43),
10. அந்தோணி மைக்கேல்(39).
இந்த வழக்கில் திறமையாக புலனாய்வு செய்து, சாட்சிகளை ஆஜர்படுத்தி, நீதிமன்ற விசாரணை மூலம், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், வழக்கினை புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் (தற்போது DSP/PEW), கூடங்குளம் காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டு கடந்த ஆறு மாதங்களில் மட்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் 13 கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 1 நபருக்கு மரண தண்டனையும், 51 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன. மேற்சொன்ன தண்டனை பெற்றவர்களில் 14 பேர் சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.