
புதுடெல்லி,
அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜூன் 26-ந்தேதி மத்திய வணிகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினர் அமெரிக்கா சென்றனர். அவர்கள் ஜூலை 2-ந்தேதி வரை வாஷிங்டனில் தங்கியிருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
முன்னதாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வாகனங்கள் மற்றும் இலகுரக லாரிகள் மீதான வரியை 25% அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கடந்த மார்ச் 26-ந்தேதி அமெரிக்க அரசு அறிவித்தது. தொடர்ந்து ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 26% பரஸ்பர வரியை அமெரிக்கா விதித்தது. ஆனால் அந்த அறிவிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது.
இந்த கூடுதல் 26% வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. அதே சமயம், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யபப்டும் பால் பொருட்கள், ஆப்பிள்கள், மரக்கொட்டைகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற விவசாய பொருட்களுக்கு வரிச் சலுகைகளை அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோருகிறது.
சில தொழில்துறை பொருட்கள், ஆட்டோமொபைல்கள், குறிப்பாக மின்சார வாகனங்கள், ஒயின் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் மீதான வரிச் சலுகைகளையும் இந்தியாவிடம் அமெரிக்கா கேட்கிறது. இதற்கிடையில் வரிவிதிப்பை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த கால அவகாசம் வரும் 9-ந்தேதிக்குள் நிறைவடைகிறது.
அதற்குள் அமெரிக்க அரசுடன் நடுநிலையான ஒப்பந்தத்தை உறுதி செய்வது தொடர்பாக இந்திய குழுவினர் கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், இந்திய குழுவினர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். இருப்பினும் அமெரிக்க தரப்புடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்றும், வரும் 9-ந்தேதிக்குள் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.