திருநெல்வேலி: விபத்து மரணங்கள் இந்த ஆண்டு 48 சதவிகிதம் குறைவு-காவல்துறை தகவல்

1 week ago 3

இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சாலை விபத்துக்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல் துறையினர் தொடர்ந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையேயும், வாகன ஓட்டுனர்களிடையேயும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையேயும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் அது தொடர்பாக மாவட்ட காவல்துறையினர் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கை மேற்கொண்டு அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், வாகனம் ஒட்டி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதுடன், தினந்தோறும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளான ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளிடம் நேரடியாகவும், துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் எச்சரிக்கை பதாகை, எச்சரிக்கை விளக்குகள், தேவையான இடங்களில் வேகத்தடை, ஒளிரும் பட்டைகள் போன்றவை அமைத்தும் முக்கிய சந்திப்புகளில் உயர கோபுர மின்விளக்குகள் அமைத்தும், சாலை விதிகளின்படி சாலையில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் இதர துறையினருடன் சேர்ந்து செய்தும் சாலை விபத்துக்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருடத்தில் மட்டும் இதுவரையில் 268 விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக கடந்த 2024-ம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் நடந்த சாலை விபத்துக்களில் 189 நபர்களுக்கு காயங்களும், 92 சாலை விபத்து மரணங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தில் அதே காலகட்டத்தில் 178 நபர்களுக்கு காயங்களும், 48 சாலை விபத்து மரணங்களும் நடந்துள்ளது. இதில் கடந்த ஆண்டினை ஒப்பிடும்போது 48 சதவிகிதம் விபத்து மரணங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article