
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, திருத்துறைப்பூண்டி தொகுதியை கோட்டூர் ஊராட்சியுடன் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து பேரூராட்சியாக உயர்த்தப்படுமா..? என்ற சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அருகில் உள்ள ஊராட்சிகளை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடம் இணைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 375 ஊராட்சிகளை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க உத்தேச அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எல்லாம் தகுதியும் இருந்தால் இந்த ஆண்டே இந்த சட்டசபை கூட்டத் தொடரில் திருத்துறைப்பூண்டி நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்" என்று அவர் தெரிவித்தார்.