திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு..!!

1 day ago 1

டெல்லி: திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய வரைவு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலம் உள்ள நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட மசோதாவுக்கான வரைவு அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக்குழு தாக்கல் செய்தது. பாகிஸ்தான் பிரிவினையின் போது இஸ்லாமியர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் தற்போதும் இஸ்லாமியர்களால் தானமாக வழங்கப்படும் ஏராளமான சொத்துகளை இஸ்லாமிய வக்ஃபு வாரியம் நிர்வகித்து வருகிறது.

இந்த வாரியத்தை சீரமைக்கப்போவதாக கூறி வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது. திருத்தப்பட்ட சட்ட வரைவின்படி வக்ஃபு வாரியத்தில் 2 பெண் உறுப்பினர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும். மேலும் இஸ்லாமியர் அல்லாத இருவர் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும். அத்துடன் வக்ஃபு வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

அந்த நிலங்கள் வக்ஃபு நிலமா என்பதை முடிவு செய்ய நீதிமன்றங்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படும் என்றும் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் விவாதித்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது. 31 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றக்கூட்டுக்குழு கடந்த 6 மாதங்களாக 34 அமர்வுகளில் மொத்தம் 34 பிரிவுகளில் தனித்தனியாக விவாதம் நடத்தியது.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி கண்ணாடி டம்பளரை உடைத்து ஆத்திரமாக பேசியது. ஆ.ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் அரங்கேறியது. மறுபுறத்தில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த மொத்தம் 572 முன்மொழிவுகளையும் குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் நிராகரித்தார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் முன்வைத்த முன்மொழிகளை ஏற்று அவற்றில் 14 திருத்தங்களை செய்து வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

655 பக்கங்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு வரைவு அறிக்கையின் நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் நேற்று அனுப்பப்பட்டு இன்று காலை இறுதி விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று பார்லிமென்ட் வளாகத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா மீதான கூட்டுக் குழுவின் கூட்டம் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தி.மு.க., எம்.பி.,க்கள் ஆ.ராசா, அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குழுவின் அறிக்கையை அவசரப்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். பின்னர் கூட்டுக்குழு கூடி ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய வரைவு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. பா.ஜ.க. கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து திருத்தங்களும் ஏற்கப்பட்டன. வரைவு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இறுதி அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூட்டுக்குழு தலைவர் இன்று வழங்குவார்.

 

The post திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு..!! appeared first on Dinakaran.

Read Entire Article