
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 3-ம்தேதி மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினசரி இரவு 7 மணிக்கு முருகப்பெருமான் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அன்ன வாகனம், புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து, முருகனை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. முருகப் பெருமான் வள்ளி தாயாரை திருத்தணி மலைமீது வைத்து திருமணம் செய்து கொண்டதாக உள்ள ஐதீகத்தின் அடிப்படையில், குதிரை வாகனத்தில் புறப்பட்ட முருகப் பெருமான், வள்ளி தயாருடன் கோவிலில் உள்ள வள்ளி மண்டபம் சென்றடைந்தார். பின்னர் வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, முருகப்பெருமானின் திருக்கல்யாண கோலத்தை கண்டு தரிசனம் செய்தனர்.