திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோயில்களில் தை கிருத்திகை விழா கோலாகலம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: காவடிகளுடன் வந்து சாமி தரிசனம்

3 hours ago 1

திருத்தணி: தை மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று திருத்தணி மற்றும் சிறுவாபுரி முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.  முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், தை மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் முருகன் மலைக்கோயிலில் காவடிகளுடன் குவிந்தனர். இதனால், மலைக்கோயில் மாட வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து ரூ100 சிறப்பு கட்டணம் மற்றும் பொது வரிசையில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மலைக்கோயிலில் காவடிகளின் ஓசைகளும், பக்தர்களின் அரோகரா முழக்கங்களுடன் கோலாகலம் பூண்டு காணப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், மலைக்கோயில் சாலையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, இரவு வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது. இதேபோல் தை கிருத்திகையை முன்னிட்டு நேற்று பெரியபாளையம் அர்கே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.தை கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோயில்களில் தை கிருத்திகை விழா கோலாகலம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: காவடிகளுடன் வந்து சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article