*இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வியூகம்
* அமைச்சர்கள் நேரில் ஆய்வு
சென்னை : பக்தர்கள் சிரமமின்றி செல்லும் வகையில் திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோயில்களில் ₹100 கோடி மதிப்பில் மாற்று பாதைகள் அமைக்கும் திட்டம் குறித்து அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், முருகன் கோயிலுக்கு மேற்கு பகுதியில் மாற்று மலைப்பாதை அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
அதன்படி, மலை கோயிலுக்கு பின்புறத்தில் இருந்து சித்தூர்-திருத்தணி மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருவாய்த்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கியது. பின்னர் மாற்று மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை நெடுஞ்சாலைத்துறை சார்பில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலை கோயிலுக்கு மாற்று மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் நேற்று மலைக்கோயிலில் படா செட்டிகுளம் பகுதியில் ஆய்வு செய்தனர். மலைக்கோயிலில் படா செட்டிகுளம் பகுதியிலிருந்து அமிர்தபுரம் வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு அமைய உள்ள மாற்று மலைப்பாதை திட்டம் குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரைபடம் மூலம் அமைச்சர்களுக்கு விளக்கினர். திட்ட மதிப்பீட்டு தொகை ₹55 கோடியை நெடுஞ்சாலைத் துறை கணக்கில் செலுத்த இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளதால், பணிகள் உடனடியாக தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
* பெரியபாளையம் அருகே, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதிகளவில் பக்தர்கள் வந்து செல்லும் காலங்களில் குறுகிய சாலை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சிறுவாபுரி கிராமத்திற்கு செல்லும் ஒருவழிப்பாதையான உட்புற சாலையை விரிவுபடுத்தி தர வேண்டுமென பக்தர்கள் கோரினர்.
இந்நிலையில், சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு மற்றும் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, உட்புற சாலையில் இருந்து மாற்றுப்பாதை அமைக்கும் திட்டம் குறித்து வரைபடங்களுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அமைச்சர்களுக்கு விளக்கினர்.
சுமார் 4.6 கி.மீ., சாலை பணிகளுக்காக 12 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அறநிலையத்துறை வழங்கும் ₹45 கோடி மதிப்பில் 6 மாதங்களில் உட்புற சாலையை விரிவுபடுத்தி 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே உள்ள சாலை 7 முதல் 11 மீட்டர் அகலம் கொண்டதாக இருப்பதால், 32 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவுபடுத்தப்பட இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
அடுத்த மாதம் டெண்டர்
திருத்தணி முருகன் கோயிலுக்கு மேற்கு பகுதியில் மாற்று மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மலையிலிருந்து சித்தூர் சாலை வரை 2 கி.மீ தூரம் இந்த திட்டத்திற்காக வனத்துறையிடம் கோப்பு நிலுவையில் உள்ளது. வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் நிலம் கையகப்படுத்த ₹1.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிப்ரவரியில் டெண்டர் கோரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
The post திருத்தணி, சிறுவாபுரி கோயில்களில் ₹100 கோடியில் மாற்றுப்பாதை திட்டம் appeared first on Dinakaran.