திருத்தணி கோயிலில் திருப்படி திருவிழா: ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

4 weeks ago 4

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில், திருப்படி திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31ல் திருப்படி திருவிழா மற்றும் ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஓராண்டை குறிக்கும் வகையில் மலைக்கோயில் திருப்படிகள் 365 அமைந்திருப்பதால் கோயிலில், திருப்படி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், மலைக்கோயில் காவடி மண்டபத்தில் திருப்படி திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமை வகித்தார். கோயில் இணை ஆணையர் ரமணி வரவேற்றார். கூட்டத்தில் டி.எஸ்.பி கந்தன், கோயில் அறங்காவலர்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்படி திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயில் வருவார்கள் என்பதால் குடிநீர், பொதுக்கழிப்பிடம், தூய்மை, சுகாதாரப் பணிகள், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு தொடர்பாக துறை ரீதியாக செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர். இதையடுத்து திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற உள்ள ஆருத்ரா அபிஷேக விழா ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

The post திருத்தணி கோயிலில் திருப்படி திருவிழா: ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article