திருத்தணி: திருத்தணி அருகே, சூரிய நகரம் ஊராட்சி, கஜலட்சுமிபுரம் பகுதியில் திருத்தணி அதிமுக ஒன்றியச் செயலாளர் இ.என்.கண்டிகை ரவி, சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோருக்குச் சொந்தமான 2 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு குத்தகை உரிமம் பெற்று, மலையிலிருந்து பாறைகளை வெடிவைத்து உடைத்து, கட்டு கற்கள், ஜல்லி, சிப்ஸ், எம்.சாண்ட் போன்ற கனிமவளத்தை பல்வேறு பகுதிகளுக்கு கனரக வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குவாரிக்கு அருகில் உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் நேற்று அதிமுக ஒன்றியச் செயலாளர் ரவியின் கல்குவாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரிகளில் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் கூடிய வெடி பொருட்கள் பயன்படுத்தி வருவதால், வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. வீடுகளில் தூசி படிந்து, உடல்நலக்கேடு ஏற்படுவதால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக, கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால், கிராம சாலை குண்டும் குழியுமாக மாறி அச்சாலையில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
The post திருத்தணி அருகே அதிமுக பிரமுகரின் கல்குவாரி முற்றுகை appeared first on Dinakaran.