சென்னை: சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், அறுபடைவீடு முருகன் கோயில்களின் மேம்பாட்டு பணிகள், மகா சிவராத்திரி பெருவிழா மற்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களின் திருப்பணி குறித்த சீராய்வுக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் திருச்செந்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டிலும், பழனியில் ரூ.240 கோடி மதிப்பீட்டிலும், திருத்தணி ரூ.183 கோடி மதிப்பீட்டிலும், மருதமலையில் ரூ.61 கோடி மதிப்பீட்டிலும், சிறுவாபுரியில் ரூ.16.50 கோடி மதிப்பீட்டிலும், குமாரவயலூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டிலும், உதகமண்டலம்-காந்தலில் ரூ.16 கோடி மதிப்பீட்டிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பிற்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் 5 நிறுவனங்களிடமிருந்து இறுதி அறிக்கை பெறப்பட்டு மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் 2 நாளில் அப்பணிக்கான டெண்டர் கோரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவின் மூலம் 216 அரிய நூல்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதோடு விரைவில் மேலும் 300 நூல்களை பதிப்பிக்கும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது என மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் கூறினார். நீதிமன்றம் காட்டுகின்ற வழியில் அவரவர் சமயங்களை அவரவர் வழிபடுவதற்கான நிலையை திருப்பரங்குன்றத்தில் ஏற்படுத்த வேண்டும் என சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கூறினார். மருதமலையில் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படுவதற்கு எங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ந.திருமகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுகிசிவம், அறுபடைவீடு திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
The post திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.