திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுற்றுப்பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு

2 hours ago 2


திருச்செந்தூர்: கூட்ட நெருக்கடியை தவிர்க்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கூடுதலான சுற்றுப்பேருந்துகளை இயக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் வரும் பக்தர்கள் நேரிடையாக கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள நாழிக்கிணறு பேருந்து நிலையம் வரை செல்கின்றனர். மற்றபடி பேருந்துகள் மற்றும் ரயிலில் வருபவர்கள் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்படுகின்றனர். அங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் கோயிலுக்கு செல்ல வேண்டும். எனவே பக்தர்களின் வசதிக்காகவும், நகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் விதமாகவும் கோயில் வாசலுக்கு என தனியாக சுற்றுப்பேருந்துகள் (சர்குலர் பஸ்) இயக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவுக்காக நவ.2ம் தேதி முதல் நவ. 18ம் தேதி இயக்கப்பட்டன. அதன்பிறகு நவ. 26 முதல் தொடர்ச்சியாக சுற்றுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 5 மணி நடைதிறந்தது முதல் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவதை கணக்கில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 சுற்றுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுப்பேருந்துகளில் பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக கோயில் வாசலுக்கு வந்து சென்றும், ஆண்களுக்கு மட்டும் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியினை சமாளிக்கும் விதமாகவும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காகவும் இயக்கப்படும் சுற்றுப்பேருந்துகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.ஆனால் தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தினால் சுற்றுப்பேருந்துகள் நிரம்பி வழிகிறது. எனவே அரசுப்போக்குவரத்து கழகம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு இயக்கப்பட்டு வரும் சுற்றுப்பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய பேருந்தும், படிக்கட்டில் பயணமும்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாகவும், நெடுந்தூர வாகன பயணத்திலும் வரும் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு புறப்படுவதற்காக நிரம்பி வழியும் சுற்றுப்பேருந்துகளில் ஏறி தூக்க கலக்கத்தில் கால் கடுக்கவும், படிக்கட்டில் நின்றும் பயணிக்கும் நிலையே உள்ளது. மேலும் லாபகரமாக உள்ள சுற்றுப்பேருந்துகள் அனைத்தும் பழைய நகரப்பேருந்துகளாக உள்ளதை மாற்றி புதிய பேருந்துகளை இயக்கிடவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுற்றுப்பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article