திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது: வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம்

2 weeks ago 5

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று காலை யாகசாலை பூஜைகளுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 7ம் தேதி நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்தல புராணத்தை உணர்த்தும் கந்தசஷ்டி விழா, நேற்று காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

பின்னர் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக சண்முகவிலாசம் வந்தமர்ந்து காட்சியளித்தார். மாலையில் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 7ம் தேதி மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் கந்தசஷ்டியின் சிகரமான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
8ம் தேதி மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு கோயிலில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தும் விரதம் துவங்கினர். கந்தசஷ்டி விழா நாட்களில் யாகசாலையில் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.3 ஆயிரம், அபிஷேகத்திற்கு ரூ.3 ஆயிரம் மற்றும் விஸ்வரூப தரிசனத்துக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

* பழநியிலும் கந்தசஷ்டி கோலாகலம்
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 12 மணிக்கு உச்சிகால பூஜை செய்யப்பட்டு காப்புக் கட்டப்பட்டது. காப்புக்கட்டையொட்டி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் கல்ப பூஜை நடந்தது. தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்களை வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதனைத்தொடர்ந்து மூலவர், உற்சவர், சண்முகர், துவாரபாலகர்கள், நவவீரர்கள், வீரபாகு, விநாயகர், தீப ஸ்தம்பம் போன்றவற்றிற்கும் காப்பு கட்டப்பட்டது. விழாவிற்காக பழநி கோயில் யானை கஸ்தூரி நேற்று மலைக்கோயிலுக்கு யானைப்பாதை வழியாக அழைத்து வரப்பட்டது. அங்கு கஸ்தூரி யானைக்கும் காப்பு கட்டப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி நடைபெறும்.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது: வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம் appeared first on Dinakaran.

Read Entire Article