மதுரை: திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த பா.ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும். அப்போது 7- வது நாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கந்த சஷ்டி விழாவின் போது தினமும் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள். சூரசம்ஹாரம் அன்று கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். திருச்செந்தூர் கோயிலில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15,000 முதல் 16,000 பக்தர்கள் தான் சாமி தரிசனம் செய்ய முடியும். சாதாரண நாட்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனமாக ஒரு நபருக்கு ரூ. 100 கட்டணமாக வசூல் செய்கிறார்கள். அதுவே, கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனம் கட்டணமாக ரூ. 200 நிர்ணயம் செய்துள்ளார்கள்.