சென்னை: சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெகந்நாதன் சாலையில் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள முதல்வர் படைப்பகத்தின் முன்னேற்பாடு பணிகளையும், கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையத்திலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடசென்னையில் கட்டப்பட்டு வரும் 7 புதிய பேருந்து நிலையங்களும் அடுத்தாண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 7ம் தேதி 6 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருக்கல்யாணத்திற்கு 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்றும், ஒட்டுமொத்தமாக கந்த சஷ்டி விழாவிற்கு 14 லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பக்தர்களுக்கு தேவையான கழிப்பிட வசதி, தீயணைப்பு வாகனம், குடிநீர் வசதி அனைத்து வசதிகளும் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
கந்த சஷ்டி திருநாளில் 12 திருக்கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகளும் இசைக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் 738 பேரை வைத்து கந்த சஷ்டி பாராயணமும் படிக்கப்பட உள்ளது, இன்று மாலை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பாராயணத்தை நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அதுல் மிஸ்ரா ஐஏஎஸ். பிரவீன் குமார் ஐஏஎஸ். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, நாகராஜன் மண்டல குழு தலைவர்கள் சரிதா. நந்தகோபால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.