திருச்செந்தூர், ஜூலை 1: திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குழாய் பதிப்பதற்கு பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் செயல்படுகிறது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பகத்சிங் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடை திட்ட தொட்டியில் விடுவதற்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குழாய் பதிக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி விடுமுறையில் நடந்துள்ளது.
இதையறிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி திறந்தவுடன் ஒப்பந்தக்காரர்கள் கழிவுநீர் செல்வதற்கான குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் மணல்மேடு சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள், நிர்வாகிகள் ராஜ், தமிழ்ச்செல்வன், சங்கர், முன்னாள் மாணவர் ராஜேஷ், தமிழக மாணவர் இயக்க நிர்வாகி அஜித் ஆகியோர் கழிவுநீர் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஒப்பந்தக்காரர்கள் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றனர். இருந்த போதிலும் பள்ளி வளாகத்திற்குள் கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது.
The post திருச்செந்தூர் அரசு பள்ளி வளாகத்தில் கழிவுநீர் பாதை அமைக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.