திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இரண்டரை வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, பெற்ற தாயே தொட்டில் கயிற்றால் குழந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (38). வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி (34). இவர்களுக்கு தேவ் (8) என்ற மகனும், இரண்டரை வயதில் ஆதிரா என்ற பெண் குழந்தையும் உள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் தேவ் முக்காணியில் உள்ள பாட்டி வீட்டில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை பார்வதி, குழந்தை ஆதிரா இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது வீட்டின் சுவர் ஏறி குதித்து வந்த மர்மநபர் பார்வதியின் கழுத்தில் கிடந்த நகையை கழற்றித் தரும்படி கேட்டு குழந்தை ஆதிரா முகத்தில் துணியை வைத்து அமுக்கி மிரட்டியதாகவும், அதனால் பார்வதி நகையை கழற்றி கொடுத்த போது திடீரென குழந்தை மயங்கியது.
இதையடுத்து மர்ம நபர் குழந்தையையும், நகையையும் போட்டு விட்டுவிட்டு தப்பி சென்றதாகவும் கூறி பார்வதி கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் வந்து குழந்தையை மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது பார்வதி முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் பார்வதி எம்எஸ்சி ஐடி பயின்று விட்டு திருமணத்திற்கு முன்பு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு வீட்டில் இருந்த போதும் வேலைக்கு செல்ல வேண்டும் என அடிக்கடி கூறி வந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கணவர் வெளியே சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்தபோது ஆத்திரத்தில் தொட்டில் கயிற்றால் குழந்தையின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். அதன்பிறகு கணவரை அழைத்து வீட்டுக்குள் திருடன் வந்து குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து பார்வதியை போலீசார் கைது செய்தனர்.
The post திருச்செந்தூரில் பெண் குழந்தை கொலையில் திருப்பம் மனஅழுத்தத்தால் பெற்ற மகளை கயிற்றால் இறுக்கி கொன்ற தாய் appeared first on Dinakaran.