திருச்செந்தூரில் தெருக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது - கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

1 month ago 4

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த சுரேஷ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் இருப்பதால், நாள்தோறும் 40 ஆயிரம் நபர்களும், விழாக்காலங்களில் ஒரு லட்சம் நபர்களும் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றனர்.

திருச்செந்தூர் நகராட்சியில் தெருக்களின் அகலங்கள் தொடக்கம் முதல் கடைசி வரை ஒரே மாதிரியாக இல்லை. தெருக்கள் குடியிருப்புவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்து கோர்ட்டும் பல உத்தரவுகளை வழங்கியுள்ளது. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, திருச்செந்தூரின் அனைத்து தெருக்களையும் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, தெருவின் நீள, அகல விவரங்களுடன் தெருவின் பெயர் பலகையை வைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஸ்ரீமதி, நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், திருச்செந்தூரில் தெருக்களை அளந்து, பெயர் பலகை வைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் 12 வாரங்களுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 

Read Entire Article