திருச்சியில் விசாரணை கைதி உயிரிழப்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

3 months ago 21

திருச்சி, செப்.30:திருச்சியில் விசாரணை கைதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி ரங்கம் பகுதியை சேர்ந்தவர் திராவிட மணி (40). இவர் ஜீயபுரம் பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே சிறையில் உள்ள டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.

அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல டாக்டர் அறிவுறுத்தினார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திராவிட மணியின் உறவினர்கள் சிறையில் போலீசார் தாக்கியதால் தான் திராவிட மணி உயிரிழந்தார் எனக் கூறி திருச்சி அரசு மருத்துவமனை முன் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. பிறகு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோர். திராவிடமணியின் மனைவி ஷாலின் (28) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு அரசு வேலையும், அவரது இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ரங்கம் ஆர்டிஓ சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, கோரிக்கை குறித்து மேல் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து மேலும், மறியல் போராட்டம் நடைபெறாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

The post திருச்சியில் விசாரணை கைதி உயிரிழப்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article