
திருச்சி,
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரகுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மே 3-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.