திருச்சி நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் இலவச புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை விரிவாக்க திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்

5 hours ago 3

திருச்சி, மே 13: திருச்சி உறையூர் காந்திபுரம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாமினை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டம் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து திருச்சி உறையூர் காந்திபுரம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாமை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பேசுகையில், புற்றுநோய் மற்றும் சிகிச்சை விரிவாக்கம் திட்டத்தின் மூலம் பொதுவான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய மூன்று புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கி உயிரிழப்புகளை தவிர்த்து அவர்களின் வாழ்நாளை நீட்டித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு மக்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களை கொண்டு மேற்கூறிய புற்றுநோய்களுக்கான விழிப்புணர்வு வழங்கி மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்பிதழை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 167 நலவாழ்வு மையங்கள் மற்றும் 84 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இச்சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு புற்றுநோய்க்கான இலவச பரிசோதனை வசதிகள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை வாய்புற்றுநோய் பரிசோதனையும் மற்றும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபைவாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புற்றுநோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்டால் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, 10 மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். இத்திட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டத்தில் 22.20 லட்சம் நபா்களுக்கு வாய் புற்றுநோய் பாிசோதனைகளும் மற்றும் 7.76 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பாிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

பொதுமக்கள் பணிபுரியும் இடங்களான அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்களில் மருத்துவக் குழுவினரைக் கொண்டும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இலவச புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்தார். இந்நிகழ்வில், மருத்துவமனை முதல்வர் குமரவேல், இணை இயக்குநா் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலா் ஹேமசந்த் காந்தி, கூடுதல் மாநகர நல அலுவலா் எழில்நிலவன் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளா்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

The post திருச்சி நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் இலவச புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை விரிவாக்க திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார் appeared first on Dinakaran.

Read Entire Article