சின்னமனூரில் மின்வாரிய அலுவலகம் வேளாண் அலுவலக கட்டிடத்திற்கு மாற்றம்

6 hours ago 3

சின்னமனூர் : சின்னமனூரில், பழைய உதவி வேளாண்மை அலுவலக கட்டிடத்தில், மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள 27 வார்டுகள், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 14 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை, காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மின் வாரிய அலுவலகம் பொன்னகரம் சாலையில் அரசு மருத்துவமனை அருகில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. அந்தக் கட்டிடம் சிறியதாக இருந்ததால் பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் இட நெரிசலில் அவதிக்குள்ளாகினர். எனவே மின் வாரிய அலுவலகத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு சார்பில் மின் வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அருகில் காலியாக உள்ள பழைய உதவி வேளாண்மை மைய கட்டிடத்தில் போதிய இடவசதி இருப்பதால், அங்கு மின் வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

உதவி வேளாண்மை அலுவலகத்திற்கு சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் பழைய அலுவலகம் பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது.

அதன் பின்னர் இங்கு சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து உதவி வேளாண்மை அலுவலக கட்டிடம் பயன்பாடின்றி இருந்தது. தற்போது மின் வாரிய அலுவலகம் அங்கு செயல்பட்டு வருகிறது.

The post சின்னமனூரில் மின்வாரிய அலுவலகம் வேளாண் அலுவலக கட்டிடத்திற்கு மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article