திருச்சி டூ சார்ஜா: நடுவானில் திக்..திக்..திக்… 2.35 மணி நேரம் வட்டமடித்த விமானம்; 150 உயிரை காப்பாற்றிய விமானிகள் ; நடந்தது என்ன?

1 month ago 7

திருச்சி: திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் நடுவானில் சுமார் 2.35 மணி நேரம் வட்டமடித்தது. விமானிகளின் சாமார்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிக்கப்பட்டதால் 150 பயணிகள் உயிர் தப்பினர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.40 மணியளவில் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அதில், 141 பயணிகள் பயணித்தனர். விமானிகள், விமான பணியாளர்கள் என 150 பேர் இருந்தனர். வழக்கமாக விமானம் தரையிலிருந்து மேலே ஏறிய சில நிமிடங்களில் அதன் சக்கரங்கள் தானாகவே உள்நோக்கி சென்று விடும்.

ஒருவேளை சக்கரங்கள் உள்நோக்கி செல்லாவிட்டாலும், அதற்கென உள்ள பொத்தானை அழுத்தினால், சக்கரங்கள் உள்நோக்கி சென்று விடும். ஆனால், இந்த விமானம் மேலே ஏறி, 10 நிமிடங்களுக்கு மேலாகியும் விமான சக்கரங்கள் தானாக உள்நோக்கி செல்லவில்லை என தெரிகிறது. தொடர்ந்து, அதற்கென உள்ள பொத்தானை விமானி அழுத்தினார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த ‘வீல் சிஸ்டமும் ஜாம்’ ஆகி இருந்ததாக தெரிகிறது. உடனே விமானி, திருச்சி விமான நிலையத்தின் அவசர பிரிவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். மும்பையில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சி விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் திருச்சியிலேயே விமானத்தை தரையிறக்க விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விமானத்தை உடனடியாக கீழே இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இங்கிருந்து சார்ஜா செல்ல 4 மணி நேரம் பயணிக்க வேண்டும். ஒரு முறை விமானத்தில் எரி பொருள் நிரப்பினால், 5,400 கிமீ தூரம் விமானம் பறக்கும். திருச்சியில் இருந்து சார்ஜா 2,800 கிமீ (1500 நாட்டிக்கல் மைல்) தூரம். எனவே, திருச்சியில் இருந்து சார்ஜா சென்று விட்டு, மீண்டும் திருச்சி வர தேவையான எரி பொருள் விமானத்தில் இருந்தது. முழு கொள்ளளவுடன் எரி பொருள் இருப்பதால், அப்படியே விமானத்தை இறக்கும் பட்சத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், முதலில் எரிபொருள் டேங்க் தான் பாதிக்கப்படும். இதனால் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புண்டு என்பதால், ஓரளவுக்கு எரிபொருளை குறைத்த பிறகு விமானத்தை இறக்க முடிவு செய்தனர்.

அதன்படி விமானம் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலேயே வானில் வட்டமடித்தது. இதனிடையே, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட தகவல் காட்டுத் தீ போல் பரவியது. வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்த விமானத்தை மக்கள் பரபரப்புடன் அண்ணாந்து பார்த்தனர். இதற்கிடையே விமானத்தை தரையிக்க அவசர அவசரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. விமான நிலையத்தில் உள்ள 2 தீயணைப்பு வாகனங்களுடன் கூடுதலாக 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இதில் 4 வாகனங்கள் விமான நிலைய ரன்வே பகுதியில் நிறுத்தப்பட்டன. மீதி 2 வாகனங்கள், விமான நிலையத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டது.

சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். அவசர மருத்துவ உதவிக்கு 24, 108 ஆம்புலன்சுகள், 42 தனியார் ஆம்புலன்சுகள் என 66 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, விமான நிலையத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டன. ஆம்புலன்சுகளில் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் காமினி விமான நிலையத்துக்கு விரைந்து வந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் 2.35 மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம் நேற்று முன்தினம் இரவு 8.10 மணியளவில் திருச்சி விமான நிலைய பகுதிக்கு விமானம் வந்தது. தொடர்ந்து, இரவு 8.15 மணியளவில விமானத்தை விமானி தரையிறக்கினார்.

அப்போது விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. ஆனால், எந்த அசம்பாவிதமுமின்றி விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக இறங்கியதை பார்த்து அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு, விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் படபடப்புடன் இருந்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் வரவழைக்கப்பட்டு, பயணிகள் மீண்டும் சார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் நள்ளிரவு 1.47 மணிக்கு சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றது. பயணிகள், சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்ற பிறகு தான், விமான நிலையத்தில் பரபரப்பு ஓய்ந்தது.

* விமான குழுவுக்கு முதல்வர் பாராட்டு
முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். தரையிறங்குவதில் சிக்கல் என்ற தகவல் கிடைத்ததும், அலுவலர்களுடன் உடனடியாக தொலைபேசி வாயிலாக அவசரக் கூட்டத்தைக் கூட்டி, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் எனத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தயார்நிலையில் வைத்திட அறுவுறுத்தி இருந்தேன். பயணிகள் அனைவரும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், அவர்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளேன். பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி மற்றும் விமானக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

* திருச்சி-புதுக்கோட்டை வான் பரப்பில் 26 முறை வட்டமடித்த விமானம்
விமானம் மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பத்திரமாக விமானத்தை தரையிறக்க கிட்டத்தட்ட 2 மணி நேரம் 35 நிமிடம் வானில் வட்டமிட்டது. திருச்சி- புதுக்கோட்டை மாவட்ட எல்லையான அன்னவாசல், ராப்பூசல், நார்த்தாமலை, கீரனூர், இலுப்பூர் மற்றும் திருச்சி குண்டூர் உள்ளிட்ட வான் பரப்பில் விமானம் 26 முறை வட்டமடித்தது. மீண்டும் இரவு 8.15க்கு தரையிறங்கியது. இதனால், இந்த நேரத்தில் திருச்சி வந்த விமானங்கள் மதுரை உள்ளிட்ட வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.

* திருச்சியை உற்று நோக்கிய உலக நாடுகள்
தொழில்நுட்ப கோளாறுடன் விமானம் வானில் வட்டமடித்த தகவல் உலகம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இந்த விமானத்தின் இயக்கத்தை ‘பிளைட்ரேடார்’ என்ற தகவல் தரும் இணையதளம் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாக மிகுந்த பரிதவிப்புடன் பார்த்தனர். பெரும்பாலான உலக நாடுகளின் பார்வை நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் திருச்சி மீது திரும்பி இருந்தது.

* கை கொடுத்த லேன்டிங் கியர்
விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான போக்குவரத்து துறை ஆணையம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்தது. முக்கியமாக, விமானத்தின் ‘லேன்டிங் கியர்’ வழக்கம் போல் இயங்கியதால், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. திருச்சியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. எனவே வானிலை மையத்தில் இருந்து தகவல்களையும் பெற்றுக் கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கண்ணீருடன் காத்திருந்த உறவினர்கள்
2.35 மணி நேரம் வானில் விமானம் வட்டமடித்து இறங்கியதை அருகில் உள்ள திறந்தவெளி வழியாக உறவினர்கள் பார்த்து கண்ணீருடன் ஓடிய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமானத்தில் பயணித்த புதுக்கோட்டையை சேர்ந்த பயணி ஒருவரின் மனைவி பரிஜானு கூறுகையில்,‘‘ எனது கணவரை சார்ஜாவிற்கு அனுப்புவதற்காக வந்தேன். 5.40க்கு விமானம் புறப்பட்டு சென்றபிறகு நாங்களும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தோம். அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் இருப்பதாக கேள்விப்பட்டவுடன் நாங்கள் மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்பி வந்து விட்டோம். அதன்பிறகு விமானம் தரையிறங்கிய பிறகு எனக்கு செல்போன் மூலம் கணவர் தொடர்பு கொண்டு நலமாக இருப்பதாக தெரிவித்தார்,’’ என்றார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயணியின் உறவினரான லியாகத் அலி கூறுகையில், ‘‘என்னுடைய மாமாவை வழியனுப்ப வந்தோம். அதன்பிறகு நாங்களும் செய்தி கேள்விப்பட்டு தான் திரும்பி வந்தோம். விமானத்தில் இருந்து எனக்கு செல்போனில் மாமா பேசினார். அரைமணி நேரம் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாகவும், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாகவும் கூறினார். ஒரு அவசரகாலத்தில் இவ்வளவு பேர் உதவி செய்வதற்கு வந்துள்ளார்கள். உண்மையாகவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் மிக ஒற்றுமையாக ஆபத்து காலத்தில் உதவும் மனநிலையுடன் இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சிதான்’’ என்றார்.

* 109 பேர் மட்டுமே மீண்டும் சார்ஜாவுக்கு பயணம்
விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டதும், அதில் இருந்து இறங்கிய பயணிகளில் சிலர் மீண்டும் சார்ஜா செல்ல மறுத்து விட்டனர். வேறு நாட்களில் பயணம் செய்வதாக கூறி விட்டு டிக்கெட்டை மாற்றி கொண்டனர். தஞ்சை, திருச்சி, புதுகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இவர்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. இதனால் மாற்று விமானம் மூலம் 109 பேர் மட்டும் மீண்டும் சார்ஜா சென்றனர்.

* பைலட்டின் அனுபவம் எங்களை காப்பாற்றியது
பயணி உமர் கூறுகையில், ‘நாங்கள் திருச்சியில் எப்படி விமானத்தில் ஏறி போனோமோ அப்படியே மீண்டும் இறங்கினோம். பைலட் மிக அனுபவம் வாய்ந்தவர் என்பதால் சாமர்த்தியமாக விமானத்தை தரை இறக்கினார். நாங்கள் கீழே இறங்கிய பிறகுதான் நடந்த விஷயமே எங்களுக்கு தெரியும். அதுவரை எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் டேக்ஆப் ஆனதும், பயணித்து கொண்டு இருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்தோம். ஆனால் தரை இறங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்புதான் விமானத்தில் கோளாறு என்றும், இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவித்தனர். இருந்தாலும் எங்களுக்கு உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது. இதில் பயம் பீதியாவதற்குள் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது’ என்றார்.

பயணி சாகுல்ஹமீது கூறுகையில், ‘நாங்கள் விமானத்தில் இருந்தது வரை எங்களுக்கு எந்த ஒரு பதட்டமும் பயமும் எதுவும் தெரியவில்லை. நான் கடந்த 20 ஆண்டுகளாக விமானத்தில் பயணம் செய்து வருகிறேன். இது போன்று நான் பல அனுபவங்களை பெற்றுள்ளேன். ஆனால் பத்திரமாக பைலட் விமானத்தை தரை இறக்கி நாங்கள் கீழே இறங்கிய பிறகுதான் தகவல் தெரிவித்தார்கள்’ என்றார். விமானத்தில் பயணித்த மற்ற பயணிகள் கூறுகையில்,‘‘விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் விமான கேப்டன் இக்ரோம், எங்களுக்கு விமானத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை கூறினார். நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம், இன்னும் சிறிது நேரத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்படும் என தெரிவித்தார்.

அவர் சொல்லி முடித்த சிறிது நேரத்தில் விமானத்தில் திடீரென லைட்டுகள் அணைக்கப்பட்டது. சுமார் 10 நிமிடம் கழித்து மீண்டும் லைட்டுகள் போடப்பட்டது. இதேபோல் மின்சாரம் போய் போய் வந்தது. இதனால் நாங்கள் பீதியில் உறைந்தோம். ஆனாலும், விமானிகள் நீங்கள் அச்சப்பட வேண்டாம். இது சிறிய பிரச்னை தான், பிரச்னையை சரி செய்து விட்டோம் என கூறினர். விமானம் எந்த பகுதியில் பறந்து கொண்டு இருக்கிறது என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. அரைமணி நேரத்திற்கு முன்னர், இன்னும் சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்க உள்ளது என கூறினர். பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு தான் எங்களுக்கு நிம்மதி வந்தது. தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு விமான நிலையத்தில் அனைத்து வசதிகளையும் செய்திருந்தது,’’என்றனர்.

* பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் விமான நிலையத்திற்கு உடனே சென்றார். அங்கு விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமான நிலைய பகுதிக்கு பயணிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர், பயணிகளிடம் கலெக்டர் பிரதீப்குமார் உரையாடினார். போலீஸ் கமிஷனர் காமினி கூறுகையில்,‘‘விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். தொழில்நுட்ப கோளாறால் இது போன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது,’’என்றார்.

* 2018 போல் மீண்டும்…
கடந்த 2018ம் ஆண்டு அக்.11ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம் டேக் ஆப் செய்யும்போது விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், விமானத்தின் சக்கரம் மற்றும் அடிப்பகுதி சேதமடைந்தது. சேதத்தை பற்றி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தகவல் அளிக்கும் வரை விமானம் வானில் வட்டமடித்தது. இதைத் தொடர்ந்து, விமானம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு திருப்பப்பட்டு பாதுகாப்பாக அங்கு தரையிறக்கப்பட்டது. தற்போது 2024 அக்.11ம் தேதி துபாய் சென்ற விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் சுமார் 2.35 மணி நேரம் வானில் வட்டமடித்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அக்.11ம் தேதி கடந்த 2018 மற்றும் 2024ம் ஆண்டு நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

* காரணம் என்ன? ஒன்றிய அரசு விளக்கம்
ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சியில் இருந்து 141 பயணிகளுடன் சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் பத்திரமாக தரையிறங்கிய செய்தி நிம்மதி அளிக்கிறது. விமானம் தரையிறங்கும் முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக ஏற்பாடு செய்திருந்த திருச்சி விமான நிலைய பணியாளர்கள் மற்றும் விமானத்தை இயக்கிய விமானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை ‘‘ஹைட்ராலிக் பெயிலியர்’’ ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள விமான போக்குவரத்துத்துறை இயக்குனரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பே எங்கள் முதல் குறிக்கோள். இது போன்ற தொழில்துட்ப கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

* சக்கரங்கள் உள்ளே செல்லாமல் இருந்தால் என்ன ஆகும்? ஷாக் தகவல்
விமானம் வானில் பறக்க ஆரம்பித்தவுடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் விமானம் சீராக பறப்பதில் சிக்கல் ஏற்படும். முக்கியமாக, காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் விமானம் தொடர்ந்து பறக்க அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால் எரிபொருள் விரைவில் தீர்ந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் அசாம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. உதாரணத்துக்கு திருச்சி- சென்னை, திருச்சி- மதுரை உள்ளிட்ட குறைந்த தூர விமானமாக இருந்திருந்தால் அந்த இடத்திற்கு சென்று தரையிறக்கி விடலாம். இது நெடுந்தூர பயணம் என்பதால் முன்னெச்சரிக்கையாக திருச்சியில் விமானம் தரையிறக்கப்பட்டது. முக்கியமாக, விமானத்தின் சக்கரங்கள் மீண்டும் உள்ளே சென்று விடக்கூடாது. அவ்வாறு சென்று விட்டால், பல்வேறு பிரச்னை ஏற்பட்டு விடும். இதற்காக, டவுன் அன்டு லாக் என்ற கிரீன் சிக்னல் வரும். இந்த சிக்னல் வந்த பிறகு தான் விமானம் பத்திரமாக தரையிறங்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* கோளாறு ஏற்பட்டது எப்படி? விசாரணைக்கு உத்தரவு
பொதுவாக விமானம் விமான நிலையத்தில் ரன்வேயில் இருந்து டேக் ஆப் ஆக ஆரம்பித்தவுடன். விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்வது வழக்கம். குறிப்பாக, விமானம் 100 அடி முதல் 150 அடி பறக்கும் போதே விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்வதற்கான வேலையில் விமானிகள் இறங்குவார்கள். இதில், பிரச்னை ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விட்டு உடனே விமானத்தை இயக்காமல் மீண்டும் தரையிறங்குவதற்கான வேலையில் இறங்குவார்கள். ஆனால், அதிகளவு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதால், தரையிறங்கினால் பிரச்னை ஏற்படும் என கருதி வானில் வட்டமடித்து எரிபொருளை குறைத்து பிறகு விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. தற்போது, நவீன விமானங்களில் எரிபொருளை வெளியில் விட்டு, காற்றில் ஆவியாக்குவதற்கான நவீன தொழில்நுட்பம் உள்ளதாக தெரிகிறது. இந்த விமானத்தில் அந்த நவீன வசதி இல்லை என கூறப்படுகிறது. இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் தான், தொழில்நுட்ப கோளாறுக்கான முழுமையான விவரங்கள் தெரியவரும்.

* பாராட்டு மழையில் விமானிகள்
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு என்று அறிந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினோம். விமான கேப்டன் இக்ரோம் ரிபாட்லி அறிவுறுத்தலின்படி அந்த விமானத்தை இயக்கிய விமானி டேனியல் பெலிசோ மிக பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். விமானி பதற்றமாக செயல்படமால், சாமர்த்தியமாக செயல்பட்டது பாராட்டுக்குரியது. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் விமானத்தை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். முக்கியமாக, உளவியல் ரீதியாகவும் அவர்கள் திறம்பட செயல்பட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது,’’என்றனர். விமானம் பத்திரமாக இறக்கப்பட்டதை தொடர்ந்து, விமானி டேனியல் பெலிசோ மற்றும் துணை விமானிகள் பாமி ஜைனால், மைத்ரி கிருஷ்ணா ஷிதோல் ஆகியோருக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

* பயணிகளை பதற்றப்படுத்தாத விமானிகள்
விமானத்தில் பிரச்னை என்றால், பயணிகள் இடையே ஒரு விதமான அச்சம் ஏற்படும். இதை சமாளிக்க பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், உளவியல் ரீதியாக பயணிகளின் மனநிலையை அறிந்து கொண்டு, மிக சிறப்பாக விமானிகள் செயல்பட்டுள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சிறிய பிரச்னையாக கூறி பயணிகளை பதற்றப்படுத்தாமல் பத்திரமாக தரையிறக்கி உள்ளனர். தரையிறக்குவதற்கு முன்புதான் 2.35 மணி நேரமாக திருச்சி-புதுக்கோட்டை வான் எல்லையில் விமானம் வட்டமடித்து கொண்டிருப்பதே பயணிகளுக்கு தெரியவந்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையிலும் பயணிகளை அச்சப்படுத்தாமல், விமானத்தை பாதுகாப்பாக இறக்கிய விமானிகள் குழு மற்றும் விமான பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

The post திருச்சி டூ சார்ஜா: நடுவானில் திக்..திக்..திக்… 2.35 மணி நேரம் வட்டமடித்த விமானம்; 150 உயிரை காப்பாற்றிய விமானிகள் ; நடந்தது என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article