திருச்சி சூரியூரில் ₹3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்: 150 காளைகளுடன் உற்சாக வரவேற்பு

2 months ago 9

திருவெறும்பூர்: திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியும் ஒன்றாகும். தமிழகத்தில் மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றதாகும். அது போல் திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூர் ஜல்லிக்கட்டும் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் 2ம் நாளான மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இந்நிலையில் இப்பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து தர வேண்டுமென திருவெறும்பூர் எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சூரியூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. இதையடுத்து சூரியூரிலிருந்து நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் செல்லும் வழியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வாகி பூர்வாங்க பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றது. இந்நிலையில் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விமானத்தில் திருச்சி வந்தார். அவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு உதயநிதி ராஜா காலனியில் உள்ள கோர்ட் யார்டு ஓட்டலில் தங்கினார்.

இன்று காலை மத்திய பஸ் நிலையம் அருகே ரயில் மகால், சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயம் மற்றும் சிதம்பரம் மகால் ஆகிய இடங்களில் நடந்த கட்சி பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதான அடிக்கல் நாட்டு விழாவில் உதயநிதி பங்கேற்றார். வாடிவாசல் போல் விழா மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. இருபுறமும் 150 ஜல்லிக்கட்டு காளைகளை நிறுத்தி உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், கலெக்டர் பிரதீப்குமார், திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: உதயநிதி ஸ்டாலின்
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அடிக்கல் நாட்டிய பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி:
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இங்கு ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இது ஜல்லிக்கட்டு மைதானம் மட்டுமல்ல. ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானமாக அமைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி புதிதாக அமைக்கப்படும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும். ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பெற அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்வது என்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். நாளை இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் கூட்டம் நடக்கிறது. அதிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளோம். ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி கேட்டாலும் ஒதுக்குவதில்லை, பட்ஜெட்டிலும் நிதியை ஒதுக்குவதில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

The post திருச்சி சூரியூரில் ₹3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்: 150 காளைகளுடன் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article