திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

1 month ago 6


திருச்சி: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா இன்று கோலாகலமாக நடந்தது. திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார்.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி கோயில் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணிக்கு கோயில் சார்பில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர். அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தாம்பூல தட்டிலும், கூடை, கூடையாகவும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருச்சி மாநகரில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இன்றிரவு வரை பக்தர்கள் அணி அணியாக வந்து பூக்களை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்வர்.

The post திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article