திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை

3 months ago 25

*பேரன் வெறிச்செயல்

துறையூர் : திருச்சி அருகே இரும்பு கம்பியால் அடித்து பாட்டியை கொன்றதாக அவரது பேரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தில் சேர்ந்தவர் நாகலட்சுமி (94). இவருடன், இவரது மருமகள் பானுமதி (70)யும், பேரன் முரளிராஜா(43) வும் வசித்து வந்தனர். முரளிராஜா வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி திரிந்துள்ளார். கடந்த 2016ல் அவரது தந்தை பத்மநாபனை கொன்றதாக துறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு திருச்சி 2வது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கிலிருந்து கடந்த ஆண்டு முரளிராஜா விடுதலை செய்யப்பட்டார்.

நேற்றுமுன்தினம் தனது தாயாரிடம் கோழிக்கறி சமைத்து தரும்படி முரளிராஜா தொந்தரவு செய்தாராம். புரட்டாசி மாதம் என்பதால் முதலில் மறுத்த அவரது தாய், பின்னர் மகனின் வற்புறுத்தலால் கோழிகறி சமைத்து தந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை தன் தாயை எழுப்பி செலவுக்கு பணம் தரும்படி முரளிராஜா கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவரது பாட்டி நாகலட்சுமி, தூக்கத்திலிருந்து எழுந்து பேரனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளிராஜா, இரும்பு கம்பியால் பாட்டி தலையில் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்தில் நாகலட்சுமி உயிரிழந்தார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என தன் தாயாரை முரளிராஜா மிரட்டி காலை 7 மணி வரை வைத்துள்ளார். அதன்பின் அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.இதைத்தொடர்ந்து பானுமதி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான முரளிராஜாவை தேடி வருகின்றனர்.

The post திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை appeared first on Dinakaran.

Read Entire Article