சமயபுரம்: திருச்சி அருகே நடு இருங்களூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 723 காளைகளை 400 வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாமக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 723 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
காலை 11 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டில் வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து போட்டியை லால்குடி ஆர்டிஓ சிவசுப்ரமணியன், மண்ணச்சநல்லூர் தாசில்தார் பழனிவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வாடிவாசல் வழியே முதலில் கோயில் காளையும், அடுத்தடுத்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அதில் பல காளைகள் அவர்களுக்கு பிடிகொடுக்காமல் சீறிப்பாய்ந்து ஓடின. சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு போக்கு காட்டியது. இதில் காளை முட்டியதில் 20பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீரர்கள் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், நாற்காலி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை இருங்களூர், புரத்தாக்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், சிறுகனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். சமயபுரம் டிஎஸ்பி தினேஷ்குமார், இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
The post திருச்சி அருகே நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு 723 காளைகள் அதகளம்: 400 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.