திருச்சி, ஏப். 26: திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனக்கு சமூக பொறுப்பு நிதயின் கீழ் ரூ.98.40 லட்சம் மதிப்பிலான இருதய துறைக்கு நவீன எக்கோ மெஷின், பல்ஸ்டு எக்கோ மேக்னடிக் ஸ்டிமுலேட்டர் மற்றும் கம்பைன்ட் அல்ட்ரா சவுண்ட் தெரபி கருவிகள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்தில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில், கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, இருதய நோய் (கார்டியாலஜி) துறைக்கு, மொத்தம் மூன்று பிரோப்களுடன் (பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான பிரோப்கள்) இணைக்கப்பட்ட ஒரு நவீன எக்கோ கார்டியோகிராபி மெஷின் வழங்கப்பட்டுள்ளது. இருதய மருத்துவ துறையில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட எக்கோகார்டியோகிராபி பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இருதய மருத்துவத்திற்காக திருச்சி தவிர புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து இத்தகைய பரிசோதனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த நவீன எக்கோ மெஷின் இருதய துறைக்கு பெரிதும் உதவக்கூடியதாக அமையும். இந்த எக்கோ மெஷின் மூலம் வயது முதிர்ந்தோர், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான இருதய பரிசோதனைகள் மிக துல்லியமாகவும் விரைவாகவும் கிடைக்கப் பெறுகிறது. இதன் மூலம் மாவட்ட மருத்துவமனை மருத்துவ தரத்தை உயர்த்தியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையின் எலும்பியல் துறைக்கு (வலி மேலாண்மை பிரிவு) இரண்டு மேம்பட்ட மருத்துவ உபகரண அலகுகளை – ஒரு துடிப்பு மின்காந்த தூண்டுதல் மற்றும் ஒருங்கிணைந்த கேளா ஒலி (அல்ட்ராசவுண்ட்) சிகிச்சை கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சாதனங்கள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி மேலாண்மை சிகிச்சையின் தரத்தை, குறிப்பாக தசைக்கூட்டு கோளாறுகள் மற்றும் நாள்பட்ட வலி நிலைகளை பாிசோதனை செய்யும் வகையில் உள்ளது.
மேற்கண்ட உபகரணங்களை சென்னை மத்திய மண்டல சேமிப்பு கிடங்கு சார்பாக சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.98.40 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. நோயாளி பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் மருத்துவமனையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் இது உதவியாக அமையும். இந்நிகழ்வில் இந்திய உணவு கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ், மருத்துவமனை முதல்வர் டாக்டர் குமரவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் டாக்டர்கள் உதயா அருணா, அருண் ராஜ், மத்திய மண்டல சேமிப்பு கிடங்கு மண்டல மேலாளர் ராகுல் கெய்க்வாட், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post திருச்சி அரசு மருத்துவமனை இருதய துறைக்கு ரூ.98 லட்சம் மருத்துவ உபகரணம் வழங்கல்: நோயாளி பராமரிப்பை மேம்படுத்த உதவும் appeared first on Dinakaran.