திருச்சானூர்:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பிரமோற்சவம் நிறைவடைந்ததும், அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை சரிசெய்வதற்காக புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை பிரமோற்சவ விழா, பஞ்சமி தீர்த்தத்துடன் நேற்று முன்தினம் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை புஷ்ப யாகம் நடத்தப்பட்டது
புஷ்ப யாகத்தை முன்னிட்டு உற்சவ தாயார், கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண முக மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு பஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தின்படி வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு டன் மலர்கள் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தலா ஒரு டன் மலர்கள் என மொத்தம் நான்கு டன் மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தாயாரின் கழுத்தளவு நிறையும் வரை மலர்களை அர்ச்சனை செய்து சமர்ப்பித்தனர். பின்னர் தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக காலையில் உற்சவ தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு மலர் ஊர்வலமும் நடைபெற்றது.
புஷ்ப யாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.