சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் இந்து சமய அறநிலையத்துறை பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதி மிகச் சிறந்த இறையன்பர்களில் ஒருவராகத் திகழும் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களை, அறநிலையத்துறை அமைச்சராகத் தேர்வு செய்து, நியமித்து, திருக்கோயில் திருப்பணிகள் எல்லாம் முன் எப்போதும் இல்லாத வகையில் செம்மையாக நடைபெற வழிவகுத்தார்கள்.
பெருந்திட்ட வரைவுப் பணி
ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் (Master Plan) திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சமயபுரம், இராமேஸ்வரம் உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் ரூ.1770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 20 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 119 திருக்கோயில்கள் உட்பட 2,967 திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்று இறையன்பர்கள் மகிழ்கின்றனர். விரைவில் திராவிட மாடல் அரசால் நாகப்பட்டினம் திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 3,000-ஆவது குடமுழுக்கு விழா இறையன்பர்களின் மனம் மகிழும் வகையில் ஜுன் 5-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவையல்லாமல் ரூ.5,970.26 கோடி மதிப்பீட்டில் 25,813 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகள் மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ள இறை பக்தர்களின் நன்கொடையால் ரூ.1.350.78 கோடி மதிப்பீட்டிலான 10,610 பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில வல்லுநர் குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டு 12,104 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்குச் சீர்வரிசைகளுடன் திருக்கோயில்களின் சார்பாக திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி திருக்கோயில்கள் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 1,800 இணையர்களுக்கு திருமணங்கள் நடைபெற்று உள்ளன.திருமணம் செய்து கொண்ட ஒவ்வொரு இணையருக்கும் 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை, பட்டு வேட்டி உட்பட ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசைப் பொருள்களுடன் முதலமைச்சர் அவர்களால் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்கள்
நீண்ட நெடுங்காலங்களுக்கு முன் கொடை உள்ளம் கொண்ட பெருமக்கள் தம் சொத்துகளை திருக்கோயில்களுக்குக் கொடையாக வழங்கி உள்ளனர். அந்த நிலங்களில் பெரும் பகுதி தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து வருகின்றன. அவற்றுள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் இதுவரை 971 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 7,671.23 கோடி ரூபாய் மதிப்பிலான 7,560.05 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதுபோக 2,01,097.42 ஏக்கர் நிலங்கள் நவீன புவியிடங்காட்டி உபகரணங்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, 1,23,851 எல்லைக் கற்கள் நடப்பட்டு திருக்கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களிலிருந்து ரூ.1,054.40 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
திருக்கோயில் ஆவணங்களைப் பாதுகாத்தல்
ஆணையர் அலுவலகம் மற்றும் திருக்கோயில்களில் உள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்கள் (சுமார் 24 இலட்சம் பக்கங்கள்) எல்காட் நிறுவனம் மூலமாக ஆவணப்படுத்திப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஸ்கோச் விருது
புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஸ்கோச் குரூப் நிறுவனமானது (SKOCH GROUP) மக்களின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான அரசுத்துறை நிறுவனங்களுக்கான ஸ்கோச் தங்க விருதினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இணையதள சேவையான ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்திற்கு 29.03.2025 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.
திருக்கோயில்களில் அன்னதானம்
திருவரங்கம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், மதுரை, இராமேசுவரம், திருவண்ணாமலை, பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை, கள்ளழகர், மருதமலை ஆகிய 13 திருக்கோயில்களில் இறையன்பர்களுக்கு நாள்முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒரு வேளை அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சுமார் 3.5 கோடி இறையன்பர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
உணவுத்தரச்சான்று
ஒன்றிய அரசால் திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் தரச்சான்றிதழ் 523 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தரச்சான்றிதழ் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகப் பயணம்
மானசரோவர் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் இறையன்பர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் தற்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. அதேபோல, 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கும், 920 பக்தர்கள் இராமேசுரம் – காசி ஆன்மிக பயணத்திற்கும் அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 1003 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு 1,008 பக்தர்களும் ஆன்மிக பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு
தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்கள். இரண்டாம் நாள் துணை முதலமைச்சர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.இம்மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருக பக்தர்கள், அமைச்சர் பெருமக்கள், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1,003 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநாட்டு வளாகத்தில் அமைக்கப் பெற்றிருந்த கண்காட்சி அரங்கில் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி போன்றவற்றை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பார்வையிட்டனர்.
அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி
சாதி வேறுபாடுகளை அகற்றும் வழிகளில் ஒன்றாக இறைத் தொண்டு புரியும் பணி அனைத்துச் சாதியினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தினை 1972 ஆம் ஆண்டில் நிறைவேற்றினார்கள். அச்சட்டம் பல்வேறு தடைகளைக், கடந்து தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் பயிற்சி பெற்றவர்களில் 29 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். திராவிட நாயகர் ஆட்சியில் பயிற்சிகள் பெற்ற 3 பெண்கள் உட்பட 94 பேருக்குப் பயிற்சிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 11 பெண் ஓதுவார்கள் உட்பட 45 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கபட்டுள்ளன.
ஒருகால பூசை திட்டம்
ஒருகால பூசை கூடச் செய்திட முடியாத, நிதிவசதி இல்லாத 12,959 திருக்கோயில்களுக்குத் தலா ரூ.1 இலட்சம் அந்தந்தக் கோயில்களின் பெயரில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு, கிடைக்கும் வட்டித் தொகையில் அக்கோயில்களின் பூசை செலவினங்கள் செய்யப்பட்டு வந்தன.
தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் இத்திட்டத்தில் ஒரு கோயிலுக்கு முதலீடு செய்யும் தொகை 2021 ஆம் ஆண்டில் வைப்பு நிதி ரூ.1 இலட்சம் என்பதை ரூ.2 இலட்சமாக உயர்த்தியும், அதை மேலும் ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கினார்கள். இத்திட்டத்தின் கீழ் 18,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இதற்கான செலவினம் ரூ.310 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஒருகால பூசை திட்டத்தில் உள்ள 18,000 திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மாதந்தோறும் ரூ.1000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. ஒருகால பூசை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் 900 குழந்தைகளுடைய மேற்படிப்புக்காக தலா 10 ஆயிரம் ரூபாய் 2 ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் திருக்கோயில்களில் திருப்பணி
2021 முதல் 2024 வரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் ஆண்டுக்கு 1,250 திருக்கோயில்கள் வீதம் 3 ஆண்டுகளில் மொத்தம் 3,750 திருக்கோயில்களுக்குத் தலா 2 இலட்சம் வீதம் திருப்பணி நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. 2024-2025 ஆம் ஆண்டிற்கு இத்திட்ட நிதி ரூபாய் 2 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தி 1250 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 5,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்கள் பயன்பெற்றுள்ளன.
கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி
2021-2022 முதல் ஆண்டுக்கு 1250 கிராமப்புறத் திருக்கோயில்கள் வீதம் 3 ஆண்டுகளில் மொத்தம் 3750 திருக்கோயில்களுக்குத் தலா ரூ. 2 இலட்சம் வீதம் திருப்பணி நிதி வழங்கப்பட்டு கிராமப்புறத் திருக்கோயில்களுக்கான திருப்பணிகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. 2024-2025 ஆம் ஆண்டில் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதி ரூ. 2 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 5,000 கிராமப்புறத் திருக்கோயில்கள் பயன்பெற்றுள்ளன.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணி
ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் 2024-2025 ஆம் நிதியாண்டு வரை ஆண்டிற்கு ரூ.100 கோடி வீதம் ரூ.300 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளன. 274 திருக்கோயில்களில் ரூ.429.67 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 53 திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன.
யுனெஸ்கோ விருது
தஞ்சை மாவட்டம், கும்பகோணம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டடக் கலையினை பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் திருக்கோயிலை புனரமைத்தற்காக கலாச்சார பாரம்பரிய புனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோயில்களுக்குக் கம்பி வட ஊர்திகள்
இறையன்பர்கள், மலைப் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கு எளிதாகச் சென்று இறைவனை வழிபடுவதற்கு வசதியாக கம்பி வட ஊர்திகள் முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவின்படி அமைக்கப்பட்டு வருகின்றன. பழனி திருக்கோயிலில் ஏற்கனவே கம்பி வட ஊர்தி வசதி செயல்பாட்டில் உள்ளது. திராவிட நாயகர் ஆட்சியில் கரூர் மாவட்டம் அய்யர் மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலும், சோளிங்கர் அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயிலில் ரூ.20.30 கோடி மதிப்பீட்டிலும், கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளன.
பழனி மலை மற்றும் இடும்பன் மலை இடையே 90 கோடி ருபாய் மதிப்பீட்டிலும், அனுவாவியில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டிலும், திருநீர்மலையில் ருபாய் 19.60 கோடி மதிப்பீட்டிலும், திருக்கழுக்குன்றத்தில் ரூபாய் 30.50 கோடி மதிப்பீட்டிலும், திருப்பரங்குன்றம் அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலில் ரூபாய் 32.18 கோடி மதிப்பீட்டிலும் கம்பி வட ஊர்திகள் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ருபாய் 3.55 கோடி மதிப்பீட்டிலும், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ருபாய் 5.20 கோடி மதிப்பீட்டிலும் மின் தூக்கிகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அன்னைத் தமிழில் வழிபாடு
திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது 294 திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு நடைபெற்று வருகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவிகிதத் தொகை பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் 14 போற்றி நூல்களை அச்சிட்டு வழங்கி திராவிட மாடல் அரசு இத்திட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
வள்ளலார் முப்பெரும் விழா
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி அருள்பிரகாச வள்ளலாரின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள், தர்மசாலை தொடங்கப்பட்ட 156 வது ஆண்டு, ஜோதி தரிசனத்தின் 152 வது ஆண்டு ஆகிய வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்திப் போற்றும் முப்பெரும் விழா 2022 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 52 வாரங்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல் வார விழாவில் பங்கேற்று வள்ளலார் 200 இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார்கள். 52 வது நிறைவு விழாவிலும் பங்கேற்று முதலமைச்சர் அவர்கள் ரூ. 99.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையை வழங்கிப் பணிகளுக்கு ஊக்கமளித்தார்கள்.
திருவள்ளுவருக்கு கற்கோயில்
27.4.1973 அன்று முத்தமிறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி, முடிவுற்ற மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் திருப்பணி தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கையின் காரணமாக ரூ.19.17 கோடியில் கற்கோயிலாக கட்டப்பட்டு வருகிறது.
தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அருள்மிகு ஒளவையார் திருக்கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.
தங்க முதலீட்டு திட்டம்
இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி கிராம் தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டு வட்டியாக 17 கோடியே 81 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெறுகிறது.
நாள் முழுவதும் பிரசாதம்
நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 25 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் மருத்துவ மையம்
மலைக்கோயில்கள் மற்றும் அதிகளவில் பக்தர்கள் வருகை தரும் 19 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்கள் மூலம் இதுவரை 6.88 இலட்சம் பக்தர்கள்பயன்பெற்றுள்ளனர்.
ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல்
இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவின் மூலம் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்நூல்கள் இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் ஆணையர் அலுவலகத்திலும், 203 திருக்கோயில்களிலும் புத்தக விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் அறநிலையப் பணிகள் தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. இறையன்பர்கள், திராவிட நாயகர் ஆட்சியின் அறநிலையத்துறை தொண்டுகள் பல்லாண்டு காலம் தமிழ் மண்ணின் பெருமைகளை நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளன எனப் போற்றுகின்றனர்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருக்கோயில்கள் சார்பில் 1,800 திருமணங்கள், 13 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் : திராவிட மாடல் ஆட்சியின் அறநிலையத்துறை சாதனைகள்!! appeared first on Dinakaran.