* சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் : திருஉத்தரகோசமங்கை கோயில் வெளிபிரகாரத்தில் பாதுகாப்பற்ற முறையில் பழைய தூண்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், சாலை கோபுரங்கள் என 25 கோபுரங்களுக்கு நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது.
இதனால் கோயிலுள்ள ராஜகோபுரம், விமானகோபுரம், சாலகோபுரம், மண்டபம், தூண்கள். சிலைகள், சிற்பங்கள், நந்தி மண்டபம், தீர்த்தகுளம், ஸ்தூபிகள் மற்றும் புதிய உள் மற்றும் வெளி பிரகார மண்டபங்கள் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்போடு பிரகாரம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது.
கோயில் மண்டபம், தூண்கள், சிற்பங்கள் சிறந்த கட்டுமான வல்லுனர்களை கொண்டு பழைய முறைப்படியே புதுப்பிக்கப்பட்டது. மேலும் வெளிப்பிரகார மண்டபம், நந்திமண்டபம், மரகத நடராஜர் நந்தி மண்டபம் ஆகியவை புதியதாக சிற்பங்களுடன் கூடிய கல் மண்டபமாக அமைக்கப்பட்டது.மேலும் கட்டிடத்தில் சேதமடைந்த பகுதிகளை கடுக்காய், சுண்ணாம்பு, குறுமணல், கருப்பட்டி துகள் உள்ளிட்ட பழைய பாரம்பரிய கலவையை முறையை பயன்படுத்தி பூச்சு வேலைகள் நடந்தது.
அதன் பிறகு முதல் தர பஞ்ச வர்ண பெயிண்ட்களால் வண்ணங்கள் தீட்டப்பட்டது, தேவையான இடங்களில ஓவியங்கள் வரையப்பட்டது. இந்நிலையில் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் நடத்தப்பட்டதால் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையிலும் 10 சதவீத பணிகள் முழுமை அடையாமலும் உள்ளது. தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கன்னிமூல கணபதி கோயில் பகுதியில் வெளிபிரகார பகுதியில் பண்டைய கால கடற்பாறைகளால் ஆன பழைய தூண்களை, மராமத்து செய்து புதுப்பிக்காமல் அப்படியே எடுத்து வரிசையாக அடுக்கி அதன் மேல் இரும்பு கம்பி மற்றும் தகர செட் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பணிகள் முழுமை அடையாமல் கிடப்பில் இருக்கிறது. தற்போது கும்பாபிஷேகம் முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது.
சாமி,அம்பாள் தரிசனம் முடித்து வெளிபிரகாரம் வழியாக மரகத நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கன்னி மூல கணபதி கோயில் வழியாக செல்லும் போது, பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள பழைய தூண் தகர செட் மண்டபத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பணிகள் முழுமை அடையும் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பக்தர்கள் அப்பகுதிக்கு நடந்து செல்ல தடை விதித்து தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post திருஉத்தரகோசமங்கையில் பாதுகாப்பற்ற முறையில் பழைய தூண்கள் appeared first on Dinakaran.