![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35785910-upkst.webp)
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்களுக்கு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும்.
இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் வரை 10.80 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடலில் கலந்து கொண்டுள்ளனர். வருகிற நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஷியா மற்றும் உக்ரைன் உள்பட 73 நாடுகளை சேர்ந்த தூதர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் வருகிற 1-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். இதனை மேளா அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி உத்தர பிரதேச தலைமை செயலாளருக்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. அதில் ஜப்பான், அமெரிக்கா, ரஷியா, உக்ரைன், ஜெர்மனி, நெதர்லாந்து, கேமரூன், கனடா, சுவிட்சர்லாந்து, சுவீடன், போலந்து மற்றும் பொலிவியா உள்ளிட்ட 73 நாடுகளை சேர்ந்த குழுவினர் வருகிற 1-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.
அவர்கள் அனைவரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர் என தெரிவித்து உள்ளது. இவர்கள் அனைவரும் படகு வழியே நகரை சென்றடைந்து, பின்னர் புனித நீராடலில் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து, அவர்கள் அக்சயாவத் மற்றும் அனுமன் கோவிலுக்கு செல்கின்றனர்.
இதன்பின்னர், டிஜிட்டல் மகா கும்ப அனுபவ மையத்தில் மகா கும்பமேளா பற்றி அறிந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, மத்திய வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.