திருச்சி: திராவிட மாடலின் ‘வெர்சன் 2.0 இனிதான் லோடிங்’. இனி நாம் போகின்ற பாதை சிங்கப்பாதையாக இருக்கும் என பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி பஞ்சப்பூரில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்ட அடிக்கல் நாட்டு விழா, பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு விழா, ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி’ ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.236 கோடி மதிப்பில் காய்கறி அங்காடி கட்ட அடிக்கல் நாட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்தார். ரூ.128.94 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்ததுடன் அங்கு, அண்ணா சிலையை திறந்து வைத்தார். ரூ.408.36 கோடியில் தமிழகத்திலே மிகப்பெரிதாக கட்டப்பட்டுள்ள ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி’ ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தினை திறந்து வைத்த முதல்வர், கலைஞரின் சிலையையும் திறந்து வைத்து பஸ் நிலைய வளாகத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து பேருந்து முனையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர், விழா மேடையில் ரூ.1032 கோடியே 15 லட்சம் செலவில் 7,122 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.527 கோடியே 63 லட்சம் மதிப்பில் 3,597 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.856 கோடியே 5 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,17,132 பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, ஏராளமான முத்திரை திட்டங்களை நாம் கொண்டு வந்திருக்கிறோம்.
அனைத்தையும் பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது. கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.26 ஆயிரத்து 66 கோடி மதிப்பிலான ‘மெகா’ திட்டங்கள் திருச்சிக்காக மட்டுமே தரப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். நம்முடைய திராவிட மாடல் அரசு அமைவதற்கான வெற்றி பயணத்தை தொடங்கியதே இந்த திருச்சியில் இருந்துதான். மறந்திருக்க மாட்டீர்கள். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால், திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்கம் மாநாட்டில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான என்னுடைய கொள்கையை அறிவித்தேன்.
என்னவென்றால் தமிழ்நாட்டை துறைவாரியாக எப்படி உயர்த்துவோம் என்று சொல்லி, ஏழு வாக்குறுதிகளை அப்பொழுது நான் சொன்னேன். முதல் வாக்குறுதியில் வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு. இரண்டாவது வாக்குறுதி மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி. மூன்றாவது வாக்குறுதி குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர். நான்காவது வாக்குறுதி அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம். ஐந்தாவது வாக்குறுதி எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், ஆறாவது வாக்குறுதி உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், ஏழாவது வாக்குறுதி அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்.
இந்த 7 வாக்குறுதிகளில் பெரும்பாலனவற்றை இந்த 4 ஆண்டுகளிலேயே நாம் எட்டியிருக்கிறோம். பொருளாதாரத்தை பொறுத்தவரைக்கும், 9.69 விழுக்காடு என்பது இதுவரை தமிழ்நாடு பார்க்காத வளர்ச்சி இந்தியாவிலேயே நாம் தான் நம்பர் ஒன். வேளாண்மையை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு ஆண்டும் பாசன பரப்பும், விளைச்சலும் அதிகமாகி சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறோம். நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களையும் வளர்த்திருக்கிறோம். இது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகநீதி அரசை உருவாக்கி இருக்கிறோம்.
எந்த பிரிவினரும் விட்டுப்போக கூடாது என்று கவனமாக செயல்பட்டு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்பு நிலை மக்கள் என்று எல்லாருக்குமான ஆட்சியாக, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி, நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு என்று சொன்னோம். அடுத்து வருகின்ற ஆண்டுகளில் இப்போது நான் சொன்ன சாதனைகளை எல்லாம், நாமே வென்றுவிடுவது போல் இதைவிட பெரிய சாதனைகளை படைப்போம் என்று உறுதியாக சொல்கிறேன்.
இதைத்தான் நம்முடைய அரசியல் எதிரிகளால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவர்களுடைய கடந்த ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது என்று சிறியதாக ‘ரீவைண்ட்’ செய்து பார்க்கலாமா?, 3வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உழவர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் அந்த போராட்டத்தை இழிவுபடுத்தி பேசினார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, காவிரி நீர் உரிமையை பெறவும் உச்சநீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை.
அதனால், உழவர்கள் தற்கொலை செய்து கொண்டு அந்த துயரங்கள் எல்லாம் நடந்தது. இலங்கை தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்த சட்டம், அதிமுக ஆதரித்து வாக்களித்த ஒரே காரணத்தால்தான் அது நிறைவேறியது. நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் பற்றி எரிந்தது. ஏன், ஜிஎஸ்டிக்கு தலையாட்டி, நம்முடைய அரசுகளின் உயிர் மூச்சான வரிவிதிப்பு உரிமையும் போனது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் என்று பொது மக்களையே கொன்று குவித்தார்கள்.
ஏன் இதையெல்லாம் இப்போது நினைவுபடுத்துகின்றேன் என்றால், அப்படிப்பட்ட இருண்ட ஆட்சியிலிருந்து நான்கே ஆண்டுகளில், நம்முடைய விடியல் ஆட்சி எப்படிப்பட்ட மாற்றத்தை நிகழ்த்தி காட்டி இருக்கிறோம் என்று நீங்கள் ஒப்பீடு செய்து பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் சொன்னேன். இதுவெறும் தொடக்கம்தான், நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன், திராவிட மாடலின் வெர்சன் 2.0 இனிதான் லோடிங்.
4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்1 மாநிலமாகி சாதனை படைத்தோம். இனி நாம் போகின்ற பாதை சிங்கப்பாதையாக இருக்கும். ராக்கெட் வேக வளர்ச்சி என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள். அது நடந்தேற, தொடரட்டும் நமது திராவிட மாடல் ஆட்சி பல்லாண்டு. என்றும், நாங்கள் உங்களோடு என்றைக்கும் உங்களோடு இருப்போம் என்றும், நீங்கள் எங்களோடு இருக்கவேண்டும் என்றும் கேட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
* ‘பஞ்சப்பூர் அல்ல மிஞ்சப்பூர்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘பஞ்சப்பூரில் திறந்து வைத்த ‘முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பெயரில் அமைந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை பார்த்தவுடன் எனக்குள்ளே என்ன தோன்றியது என்றால், இது பஞ்சப்பூர் இல்லை, அனைத்து ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சப்பூர் என்று தோன்றியது. ஒரே நேரத்தில், 401 பேருந்துகளை நிறுத்துகின்ற வகையில் பிரம்மாண்டமான பேருந்து முனையமாக அது அமைக்கப்பட்டிருக்கிறது பசுமை சூழ்ந்ததாக இருக்கிறது.
பார்க்கிங் வசதி, ஏ.சி. ரூம்ஸ், லிப்ட், எஸ்கலேட்டர், கடைகள் என்று ஒரு விமான நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் இந்த பேருந்து முனையத்தை உங்களுக்காக நாங்கள் அமைத்திருக்கிறோம். தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக விளங்குகின்ற இந்த திருச்சிக்கு இப்படி ஒரு பேருந்து முனையம் நிச்சயம், அவசியம் தேவை தான்’ என்றார்.
* இந்திய ராணுவ வீரர்களுக்கு முதல்வர் சல்யூட்
பஞ்சப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேச துவங்கியதும், நமது நாட்டின் எல்லையான ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தினாலும், பாகிஸ்தான் ராணுவத்தின் குண்டு வீச்சினாலும் நமது சகோதர- சகோதரிகள் பலியாகி உள்ளார்கள்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமது உயிரை துச்சமாக மதித்து எல்லையில் நமது இந்திய ராணுவ வீரர்கள் போராடி வருவதையொட்டி, இறந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இங்கு கூடிய அனைவரும் அமைதியாக ஒரு நிமிடம் எழுந்து நின்று நமது வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மேடையில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
* கருணை இல்லம் சென்ற முதல்வர்
திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மன்னார்புரம் நால்ரோடு சந்திப்பு, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், ராமச்சந்திரா நகர் வழியாக பஞ்சப்பூருக்கு சென்றார்.
அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்து முதல்வருக்கு துண்டு, புத்தகங்கள் கொடுத்து கட்சியினர், மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக கிராப்பட்டி பாலம் அருகே திடீரென காரை நிறுத்தி இறங்கிய முதல்வர், அருகில் உள்ள புனித தோமையர் கருணை இல்லத்துக்கு சென்றார். அங்கிருந்த முதியோர்களை பார்த்து கனிவுடன் நலம் விசாரித்த முதல்வர், பின்னர் அங்கிருந்து பஞ்சப்பூர் புறப்பட்டு சென்றார்.
The post திராவிட மாடலின் ‘வெர்சன் 2.0 லோடிங்’ இனி நாம் போகின்ற பாதை சிங்கப்பாதை: திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.