மதுராந்தகம், மே 21: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே ஒரத்தி கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இக்கோயிலில், புதியதாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டதால், தொடர்ந்து 3 ஆண்டுகள் கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா நடத்த வேண்டும் என்பது ஐதீகம். தொடாந்து அக்னி வசந்த விழா நடத்தப்பட்டு வந்த நிலையில், 3வது ஆண்டாக அக்னி வசந்த விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் கோயில் வளாகத்தில் பாரத சொற்பொழிவு கடந்த 8 நாட்களாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை அன்று நாடகமும், சாமி வீதியுலாவும் சிறப்பாக நடத்தப்பட்டது.
கடந்த 18ம்தேதி அப்பகுதியில் விபத்தில் ஒருவர் இறந்ததன் காரணமாக, அன்று உற்சவம் எளிமையாக நடந்தது. வீதி உலா நடைபெறவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயிலில் மிக விமர்சையாக சித்திராங்கதை மாலையிடு, நாகக்கன்னி மாலையிடு உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் திரவுபதியம்மன் அலங்கரிக்கப்பட்டு, டிராக்டர் இயந்திரத்தில் இணைத்து தேர் வீதி உலா நடைபெற்றது.
இதில், அக்கிராமத்தின் முக்கிய சாலைகளில் சென்று கொண்டிருந்தபொழுது, நள்ளிரவு 12 மணியளவில் ஆஸ்பிடல் தெருவில் தாழ்வாக இருந்த உயரழுத்த மின்கம்பி மீது தேர் உரசியது.
மின்சாரம் தேர் மற்றும் டிராக்டர் இயந்திரத்தின் மீதும் பாய்ந்ததை தொடர்ந்து டிராக்டரை ஓட்டிச்சென்ற ராம்குமார் (21) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். மேலும், உடனிருந்த ஆதிகேசவன், சிவா, ஜானகிராமன், குப்பன் ஆகியோர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். அப்போது, மின்சாரம் தாக்கியவர்களை காப்பாற்றுவதற்குள் கிடு கிடுவென தேரும் எரிய தொடங்கியது. தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓரத்தி போலீசார், மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திரவுபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழா ேதர் மீது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாப பலி: சோகத்தில் மூழ்கிய ஒரத்தி கிராம மக்கள் appeared first on Dinakaran.