
சென்னை,
சென்னை சென்ட்ரல் அருகே உள்ள விக்டோரியா அரங்கை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். திரவுபதி அம்மன் கோவிலில் பூஜைகள் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒருவார காலத்தில் திரவுபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை திறக்கவில்லை என்றால், ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.