மதுரை,
மதுரையில் நேற்று நடந்த அதிமுக ஜெயலலிதா பேரவை உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
1972-ல் எம்.ஜி.ஆர். அதிமுக இயக்கத்தை ஆரம்பித்தார்.இந்த இயக்கம் உருவாகி 52 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து அதே எழுச்சியுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இன்றைக்கு கருணாநிதியின் குடும்ப சொத்தாக திமுக மாறிவிட்டது. எம்.ஜி.ஆர். எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழியில் நாங்கள் திமுகவை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்.
இன்றைக்கு டி.டி.வி. தினகரனையும், ஓ.பி.எஸ்.சை வைத்துக்கொண்டு அதிமுகவை அசைத்து விடலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்து வருகிறார். அவர்கள் இருவரும் இரட்டை இலைக்கு எதிராக நின்று மண்ணை கவ்வி, செல்லாகாசாகி போய்விட்டார்கள். நமக்கு போட்டி திமுகதான் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
திமுக ஆட்சி வந்த பின்னர் 3 முறை மின்கட்டணம், சொத்துவரி உயர்ந்து 40 சதவீதம் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. வான்வெளி சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக இந்த அரசு உள்ளது. 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.