சென்னை: ‘‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்று சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை அறிவிக்கும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவரை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித் ஷா ஓய்வெடுத்தார்.