டெல்லி : திமுக மீது பழிசுமத்தும் வகையில் பேசும் பாஜகவினருக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை, சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அனைத்து வரம்புகளையும் மீறி, கூட்டாட்சி அமைப்பையே அமலாக்கத்துறை சிதைத்துவிட்டதாக நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது, “அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறது! தனிநபர் விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை 3 நடவடிக்கை எடுத்தது? FIR பதியப்பட்ட பிறகு அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை?,”என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதனிடையே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ““முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கு உயர்ந்து வருவதை பொறுக்காமல் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். அதற்கு சம்மட்டி அடி தரும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. எங்களது அனைத்து முடிவுகள் நியாயமானது என்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு அங்கீகாரம். அமலாக்கத் துறையின் அக்கப் போர்களுக்கு இந்த தீர்ப்பு முடிவு கட்டியுள்ளது. தீர்ப்பை திமுக வரவேற்கிறது. இனிமேலாவது ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை கைவிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையால் தலையிட முடியாது.” இவ்வாறு தெரிவித்தார்.
The post திமுக மீது பழிசுமத்தும் வகையில் பேசும் பாஜகவினருக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.