திமுக நூற்றாண்டை கடப்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்: பவள விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

3 months ago 22

சென்னை: திமுக நூற்றாண்டை கடப்பதற்குள், மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆரம்பித்து 75ம் ஆண்டு நிறைவையொட்டி திமுக பவள விழா மாபெரும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு திடலில் நேற்று மாலை நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்று பேசினார்.

பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் ஏ.ஜி.மவுரியா , மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன், மனிய நேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை கட்சி தலைவர் அதியமான், தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பார்வார்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் பி.என்.அம்மாவாசி ஆகியோர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுகவின் அடிப்படைக் கொள்கைகள், சமுதாயத்தில் சீர்திருத்தம். பொருளாதாரத்தில் சமத்துவம்! அரசியலில் ஜனநாயகம்!- இதை உருவாக்கத்தான் திமுக தோன்றியது; தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதை நிறைவேற்றிக் காட்டுவதற்காகத்தான் கட்சியும் – ஆட்சியும் இருக்கிறது! இந்த உன்னதமான மூன்று கொள்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அதிகாரம் பொருந்தியவைகளாக மாநிலங்கள் இருக்க வேண்டும். அதனால்தான் மாநில சுயாட்சிக் கொள்கையை தன்னுடைய இறுதி உயிராக அண்ணா வலியுறுத்தினார். மாநில சுயாட்சிக் கொள்கையை அடைவதற்காக, பல்வேறு முன்னெடுப்புகளைக் கழகம் எடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒலித்த மாநில சுயாட்சி முழக்கம், இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது. இதைச் சொன்னால் – 1967 வரைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடந்தது என்று சொல்கிறார்கள். அப்போது இந்திய நாட்டின் மக்கள்தொகை என்ன? இப்போது மக்கள்தொகை என்ன? அன்றைய இந்தியாவும் – இன்றைய இந்தியாவும் ஒன்றா? அன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். 28 மாநிலங்கள்-8 யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இது சாத்தியமா? 1951ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,874. ஆனால், 2024 தேர்தலில் 8,360 பேர் போட்டியிட்டார்கள். அன்றைய தேர்தலும் இன்றைய தேர்தலும் ஒன்றா? அதுமட்டுமல்ல, நாம் எழுப்பும் பல்வேறு கேள்விகளில் முக்கியமானது, இவர்களால் நாடாளுமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையே, ஏழு கட்டங்களாகத்தான் நடத்த முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள் – நாடாளுமன்றத் தேர்தலோடு, இந்தியாவில் இருக்கும் அனைத்துச் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவோம் என்று சொல்வது – கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் – வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன் என்று சொல்வது போன்று இருக்கிறது. இப்போது காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. 90 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்துகிறார்கள். இந்த நிலையில் ஒரே தேர்தல் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே உணவு-ஒரே பண்பாடு – ஒரே தேர்வு – ஒரே தேர்தல் – ஒரே வரி என்று ஒரே பாட்டை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறை சாத்தியமற்ற சிக்கல் நிறைந்த பிரச்னை இது! மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கும்-மக்களாட்சித் தத்துவத்துக்கும் விரோதமானது. இதனால் என்ன நடக்கும்? பல மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும்.மாநிலங்களில் குழப்பம் ஏற்படும். மக்களவையின் வரலாறு என்ன? நாடாளுமன்ற மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இருப்பதும், பெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ.க. அரசு அல்ல. 272 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சி அல்ல பா.ஜ.க. 240 உறுப்பினர்கள் கொண்டதுதான். அதனால், மிகவும் எச்சரிக்கையோடு பா.ஜ.க தலைமை செயல்பட வேண்டும்.

திமுக விதைக்க நினைக்கும் சிந்தனைகளுக்கான அடித்தளம் தான் தோழமை இயக்கங்கள் ஒன்றாக இருக்கும் இந்த மேடை. 75 ஆண்டுகளைக் கடந்திருக்கும் திமுக, நூற்றாண்டைக் கடப்பதற்குள், மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார். முடிவில், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தயாநிதி எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

The post திமுக நூற்றாண்டை கடப்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்: பவள விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article