ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. முதல் நாள் வேட்பு மனு தாக்கலின்போது சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேரும், 2வது நாளான கடந்த 13ம் தேதி சுயேச்சை வேட்பாளர்கள் 6 பேரும் என 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் இன்று (17ம் தேதி) மாலை 3 மணியுடன் நிறைவடைய உள்ளது. இறுதி நாளான இன்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகமான ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. கடைசி நேரமான 3 மணிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்பு மனுக்கள் நாளை (18ம் தேதி) பரிசீலனை செய்யப்படும். தொடர்ந்து 20ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். அன்றைய தினம் மாலையே இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
The post திமுக, நாதக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.