ஈரோடு: திமுக அரசு தொடர் திட்டங்களை தருகிற காரணத்தினால், திமுகவிற்கு தொடர் வெற்றியை மக்கள் அளித்து வருகின்றனர். இதனால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், ரூ.133.66 கோடி மதிப்பீட்டில் 222 புதிய வளா்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 559 முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம், காட்டுப்பாளையத்தில் ஜிம்னாஸ்டிக் மையம் அமைக்கப்படும். ஈரோட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடம் கண்டறியப்பட்டு, விரைவில் ஐடி பார்க் அமைக்கப்படும். ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இதுபோல் பல்வேறு திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.
இப்படி தொடர் திட்டங்களை தருகிற காரணத்தினால்தான் மக்களாகிய நீங்களும் திமுகவிற்கு தொடர் வெற்றியை அளித்து வருகின்றனர். இதை கடந்த கால ஆட்சியாளர்களான தற்போது எதிர்கட்சியாக இருக்கின்றவர்களால் இந்த வெற்றிகளை தாங்கி கொள்ள முடியவில்லை. வயிற்றெரிச்சல் காரணமாக, எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டே இருக்கிறார். ஒரு எதிர்கட்சி தலைவர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம். அது தவறு இல்லை. நியாயமான புகார்களாக இருந்தால் சொல்லலாம்.
ஆனால், திமுக ஆட்சி மேல் குற்றம் சாட்ட எதுவும் இல்லாமல், எதுவும் கிடைக்காமல் பொய் சொல்லக்கூடாது. பழனிசாமி என்ற தனிநபராக அவர் பொய் கூறவில்லை. எதிர்க்கட்சி தலைவராக பொய் சொல்கிறார். அது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் சாத்தனூர் அணையை திறந்து விட்டதாக பொய்யை பரப்பினார். ஆனால், உண்மை அது அல்ல. அணை திறப்பதற்கு முன்பு 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் பெரிய அளவில் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. இதுதான் உண்மை. ஆனால், அதிமுக ஆட்சியின்போது செம்பரம்பாக்கம் ஏரியை முன் அறிவிப்பு இல்லாமல் திறந்து விட்டதால் 200 பேர் இறந்தனர். சென்னையில் 23 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் முழ்கியது. அப்போது இருந்த அமைச்சர்கள் யாரும் களத்திற்கு செல்லவில்லை. தன்னார்வலர்கள் தான் உதவி செய்தனர். இதனை மக்கள் மறந்துவிட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் நினைக்கிறாரா?
புயல், வெள்ளம் ஆகியவை இயற்கை சீற்றம். ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டது, ‘மேன் மேட் டிஸ்ஆஸ்டர்’ – மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என சிஏஜி அறிக்கையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எல்லாம் மறைத்து விட்டு, சாத்தனூர் அணையை வைத்து பழனிசாமி பொய் பேசி வருகிறார். இந்த பொய் குறித்து சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் விரிவாக அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.
எங்களை பார்த்து கத்தி பேசும் நீங்கள், ஒன்றிய அரசை பார்த்து கீச்சுக் குரலில் பேசக்கூட துணிச்சல் இல்லையா உங்களுக்கு. எதற்கு பயம்? காரணம் என்ன? உங்கள் மடியில் கனம் உள்ளது. இது தான் உங்களது லட்சணம். இந்த நேரத்தில் ஒரு சோகம் எனக்குள் இருந்து வேதனையை தந்து கொண்டுதான் இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்த சோகம்தான் அது.
அவர் நம்முடன் இந்த மேடையில் இருந்திருந்தால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை பற்றி எடுத்துச்சொல்லி இருப்பார். இவ்வாறு முதல்வர் பேசினார். இரா.மோகன் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்: திமுக முன்னாள் எம்பி இரா.மோகன் (82), கடந்த 10ம் தேதி இறந்தார். கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள இரா.மோகன் வீட்டுக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
* ‘ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் திமுக கூட்டணி கைப்பற்றும்’
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். தற்போது, ஈரோடு மாவட்ட கள ஆய்வுக்கு சென்று வந்த பின்னர், 200 தொகுதி என்ற இலக்கை எளிதாக தாண்டுவோம், இன்னும் கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
அதற்கான களப்பணிகளை உற்சாகமாக மேற்கொண்டு வருகிறோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை மீண்டும் திமுக கூட்டணி கைப்பற்றும். அந்த தொகுதி, காங்கிரசுக்கு மீண்டும் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்துபேசி முடிவை அறிவிப்போம் என்றார்.
The post திமுக தொடர் திட்டங்களை தருகிற காரணத்தினால் மக்கள் தொடர் வெற்றி அளிப்பதை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.