
திருப்பூர்,
திருப்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். இன்று வரை அரசை எதிர்த்து சிறிய ஆர்ப்பாட்டம் கூட நாங்கள் நடத்தியது இல்லை. அறிக்கை கொடுத்ததில்லை. இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்லியது இல்லை. கருத்துக்களை அறிக்கையாக கொடுத்திருப்பேனே தவிர, திராவிட மாடல் அரசை நான் ஒருநாளும் விமர்சித்தது இல்லை.
வரும் தேர்தலில் மதிமுக எத்தனை தொகுதிகள் கேட்கும் என்று நிருபர்கள் கேட்டபோது, துரை வைகோ 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். 10 அல்லது 12 இடம் கேட்கலாம். அது என்னுடைய முடிவு அல்ல. தலைமை எடுக்க வேண்டிய முடிவு என்று கூறியுள்ளார். நிர்வாக குழுவில் கூட்டணியில் இத்தனை இடங்கள் வேண்டும் என்று ஒருவார்த்தைக்கூட நான் பேசவில்லை.
தேர்தலுக்கு 3, 4 மாதங்களுக்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது எங்களுக்கு அழைப்பு விடுத்ததும் அங்கே போய் சொல்வோம். எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியே போகாது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதிமுகவை துச்சமாக மதித்து விமர்சித்து பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.