* தமிழ்நாட்டுக்கு என்று முத்திரை திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்
* ஆளுநருக்கு நடத்தை விதிகள் உருவாக்க வேண்டும்
சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இதில், திமுக பொருளாளரும் மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஒன்றிய பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக எம்பிக்கள் என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதங்களை எழுப்ப வேண்டும் போன்ற பல்வேறு ஆலோசனைகளை எம்பிக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கியமான மசோதாக்கள் வந்தால் எப்படி வாக்களிப்பது, குறிப்பாக வக்பு வாரிய சட்ட மசோதாவை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், புயல் நிவாரண நிதி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி போன்ற தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி விவகாரங்கள் குறித்து விவாதங்களை எழுப்புவது தொடர்பாகவும் எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்தச் சட்டம், யுஜிசி வரைவு கொள்கை, பொது சிவில் சட்டம் போன்றவை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்தை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக திமுக எம்பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதும் குறித்தும் ஆலோசனை வழங்கினார். அதுமட்டுமின்றி எந்தெந்த விவாதங்களில் எந்தெந்த எம்பிக்கள் பேச வேண்டும் என்பது பற்றியும் சில அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கினார். இதை தொடர்ந்து, 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன் விபரம்: ஆளுநர் மாளிகையின் ஒட்டுமொத்த செலவும் மாநில அரசின், அதாவது மாநிலத்து மக்களின் வரிப்பணம். ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு வழிகாட்ட வேண்டியவர், ஆளுநர் மாளிகையில் அமர்ந்து எதிர்கட்சித் தலைவர் போல் அரசியல் செய்கிறார். தனது அரசையே குடியரசு தின வாழ்த்தில் குறை சொல்லி, நாட்டின் பெருமையை, தமிழ்நாட்டின் சிறப்பை சிறுமைப்படுத்தியதற்கு இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர்களுக்கு ‘நடத்தை விதிகள்’ உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும்.
டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை தடுத்து நிறுத்தி, வெற்றி வாகை சூடிய வணிகர்கள் உள்ளிட்ட போராடிய அனைத்து மக்களுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டுதலை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. ‘உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது’ என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை ஒன்றிய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. சிறுபான்மையினரின் நலனைப் பாதிக்கும் வக்ப் சட்ட திருத்த மசோதா-2024-யை கொண்டு வந்து, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும் முறைப்படி விவாதம் நடத்தாமல், எதிர்கட்சிகள் அளித்த 44 திருத்தங்களையும் ஏற்காமல் அவசர அவசரமாக டெல்லித் தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்ற துடிப்பதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இச்சட்டத் திருத்தம் மீண்டும் அவையில் கொண்டு வரப்படும்போது திமுக சார்பில் திமுக தலைவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தீவிரமாக எதிர்த்து வாக்களித்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. ஒன்றிய பாஜ அரசின் நிதி நிலை அறிக்கைகளில் இதுவரை தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாடு அடியோடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. நம் மாநிலம் நேரடி வரியாக ஒன்றிய அரசுக்கு ரூ.100 கொடுத்தால், நம் மாநிலத்திற்கு ரூ.29 மட்டுமே திருப்பித் தரப்படுகிறது. ஆனால் பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது.
இதே நிலைதான் வருவாய் பகிர்வு மற்றும் மானியப் பகிர்வு அனைத்திலும் நீடிக்கிறது. தமிழ்நாடு அனைத்து வகை நிதி ஆதாரத்திலும் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகிறது. கடந்த நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு என்ற பெயரே இல்லாமல் தாக்கல் செய்த ஒன்றிய பாஜ அரசு இந்த முறை நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி, பேரிடர் நிதி உள்ளிட்டவற்றை ஒதுக்கீடு செய்யதிடவும், தமிழ்நாட்டிற்கு என்று முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை அறிவித்திடவும் ஒன்றிய அரசை இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
* டெல்லியில் போராட்டம்
கூட்டாட்சி தத்துவம், மாநில கல்வி உரிமை, உயர் கல்வி அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி திமுக மாணவரணி சார்பில் பிப்ரவரி 6ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும், திமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
The post திமுக எம்பிக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை கோப்பு, மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம்: பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்த திமுக எம்பிக்கள் தீர்மானம் appeared first on Dinakaran.