சேலம்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது தமிழ்நாடு. கடன் அளவை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக குறைத்ததா? திமுக ஆட்சியில் அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் சாதனை படைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஒவ்வொரு ஆண்டும் கடன் அளவு அதிகரித்துள்ளது. ஆட்சி முடிவதற்குள் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைக்க உள்ளது. 1.10 லட்சம் கோடிக்கும் அதிகமான வருமானம் வந்துள்ளது, ஆனால், 3.53 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்கியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பொருளாதாரம் சீர் செய்யப்படும் என்று கூறினர். நிதி மேலாண்மை குறித்து எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. பெட்ரோல், மது விற்பனை, ஜிஎஸ்டி உள்ளிட்டவை மூலம் அதிக வருவாய் கிடைத்துள்ளது.அதிக வருவாய் கிடைதும் மாநிலத்தின் கடன் அளவு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் கடன் வாங்கிக்கொண்டே சென்றால் அதை எப்படி திருப்பி செலுத்துவது.
என்னை அமைதிப்படை அமாவாசை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். அது, அவருக்கு பொருத்தமான பெயர். அவருக்கான பெயரை அவரே தேடிக் கொண்டார். ஐந்து கட்சி மாறியவர், தற்போது தி.மு.க.,வில் உள்ளார். அடுத்து எந்தக் கட்சிக்கு செல்வார் என தெரியவில்லை. ஐந்தாண்டுகளில் இரண்டு சின்னங்களில் நின்றவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபையில் கருணாநிதியையும், தி.மு.க., நிர்வாகிகளையும் விமர்சித்து பேசியது அவைக்குறிப்பில் உள்ளது. சேகர்பாபு விமர்சித்து பேசியதும் உள்ளது. இவர்கள் அரசியல் வியாபாரிகள். இவர்கள் எங்களை பேசுவதற்கு எந்த உரிமையும், அருகதையும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.