பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், ‘’வஞ்சிக்கப்படுவது தமிழ்நாடு உரிமையை மீட்போம் துணிவோடு’’ என்ற தலைப்பில் தொடர்ந்த தமிழ்நாட்டை வஞ்சித்துவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை பெரவள்ளுரில் நடைபெற்றது. பகுதி செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் மனுஷ்யபுத்திரன், உடுமலை தண்டபாணி உள்பட பலர் கண்டன உரையாற்றினர். மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் வெற்றியழகன், ஜோசப் சாமுவேல் மற்றும் மண்டல குழு தலைவர் சரிதாமகேஷ்குமார், பகுதி செயலாளர் ஐ.சி.எப்.முரளி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது; ஒரு மாநிலத்தின் வரி பங்கில் ஒன்றியத்திலேயே அதிகம் 6 லட்சம் கோடிக்கும் அதிகமான பங்கினை வழங்கியது தமிழ்நாடு. ஆனால் ஒன்றிய அரசால் குறைவான நிதி வழங்கப்படும் மாநிலம் தமிழ்நாடுதான். ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும் தமிழ்நாடு முதல்வர் தனது மதியால் திட்டங்களை செயல் படுத்துகிறார். திமுக குறித்து பேசியவர்களுக்கு சாவு மணி அடிக்கும் வெற்றி ஈரோடு வெற்றி. 200ல் அல்ல 234லிலும் திமுக வெல்லும். மீண்டும் கழக ஆட்சி கழக தலைவர் தலைமையில் அமைப்போம். இவ்வாறு பேசினார்.
மனுஷ்யபுத்திரன் பேசியதாவது; சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்க சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது. இந்துக்கள் என பேசுபவர்கள் அவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. திமுக அரசு செய்கிறது அனைவருக்குமான அரசு என்பதை நிரூபிக்கிறது. சீமான் என்பது தனி நபர் அல்ல, அவருக்கு பின்னால் ஒரு கூட்டமே அவருக்கு வழிவிட்டு நின்றார்கள். திராவிடத்துக்கு எதிராக ஒரு புதிய தலைவனை உருவாக்கலாம் என்ற கனவில் செருப்படி விழுந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கான நிதியை விட உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு நிதி அதிகம். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை செய்ததைபோல் நம்மை செய்யமுடியாது.
ஏன் என்றால் சமூக நீதிக்கான இயக்கம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிடாலும் மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுப்பது தான் திமுக. பெரியாரை அழித்தால் திராவிடம் அழிந்துவிடும் என நினைக்கிறார்கள் ஆனால் அடிக்க அடிக்க உயர்ந்து நிற்கிறார் பெரியார். பெரியாரை அடிக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஈரோடு இடைத்தேர்தல் சாட்சி. சீமானுக்கு பின்னால் நிற்பவர்களுக்கும் 2026ல் இதே நிலைதான். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் இல்லாதவர்கள் என எல்லோருக்குமான நலனை திமுக தான் காக்கும். இவ்வாறு பேசினார்.
The post திமுக ஆட்சி குறித்து பேசியவர்களுக்கு ஈரோடு இடைத்தேர்தல் மூலம் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.