புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டர் 39ல் வசிக்கும் தீபக் பெஹல் என்ற தொழிலதிபர் ஒருவருடனான பணத் தகராறில் தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்ததை எதிர்த்து தேபு சிங் மற்றும் தீபக் சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நொய்டா விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய்குமார், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிவில் தகராறுகளில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்காக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,’ உத்தரபிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் அடுத்த 2 வாரங்களுக்குள் டிஜிபி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
சிவில் தகராறுகளில், குற்றவியல் சட்டம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கி நொய்டா காவல் அதிகாரி அல்லது கவுதம்புத்தா நகர் மாவட்ட அதிகாரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். அப்போது,’ சிவில் அதிகார வரம்பு என்று ஒன்று இருப்பதை உபியில் உள்ள வழக்கறிஞர்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது’ என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு,’ சிவில் தகராறுகள் தீர்க்க நீண்ட காலம் எடுக்கும் என்பதால் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன’ என்று எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள்,’ சிவில் வழக்குகள் நீண்ட காலம் எடுக்கும் என்பதால், நீங்கள் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பீர்களா?’ என்று கேட்டனர்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில்,’ உத்தரபிரதேசத்தில் ஏதோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் ஒன்று தினம் தினம் நடக்கிறது. தினமும் சிவில் வழக்குகள் கிரிமினல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன. இது அபத்தமானது. பணம் கொடுக்காததை கிரிமினல் குற்றமாக மாற்ற முடியாது. விசாரணை அதிகாரியை சாட்சி கூண்டுக்கு வருமாறு நாங்கள் அறிவுறுத்துவோம். குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் முறையை விசாரணை அதிகாரி கற்றுக்கொள்ளட்டும்’ என்றார்.
The post தினம்,தினம் ஏதோ ஒன்று நடக்கிறது; உபியில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.